வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ ஆரம்பம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா இன்று காலை பல்லாயிரகக்ணக்கான அடியார்கள் புடைசூழ கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இராமபிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினையும் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக்கேணியைக்கொண்ட பெருமையினையும்கொண்டதாக மாமாங்கேஸ்வரர் ஆலயம் இருந்துவருகின்றது.

அனுமன் இலங்காபுரியை எரித்தபோது தனது வாலினை நனைத்து கோபம் தனிந்த ஆலயம் என்ற இதிகாச புராணக்கதையினைக்கொண்டதாகவும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வரலாற்றுசிறப்பு காணப்படுகின்றது.

நேற்று கொடியேற்றத்திற்கான கொடிச்சீலைகொண்டுவரும் நிகழ்வு மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர்ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்றத்தினை முன்னிட்டு இன்று காலை விசேட பூஜைகள் யாகம் என்பன நடைபெற்றன.

தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் வசந்தமண்டப பூஜை,கொடிச்சீலைக்கான பூஜைகள் நடைபெற்று கொடிச்சீலை கொடித்தம்பத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

அதனைத்தொடர்ந்து விசேட பூஜைகள் நடைபெற்ற அடியார்களின் அரோகரா கோசத்துடன் தேவ,நாத,பராயணம் முழங்க கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த கொடியேற்றத்தினை காண்பதற்காக நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.

வருடாந்த மஹோற்சவத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி இரத உற்சவமும் 11ஆம் திகதி பிதிர்க்கடன் தீர்க்கும் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.