கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் தீர்த்தோற்சவம் -பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கானர் புடைசூழ இன்று சனிக்கிழமை(11-08)முற்பகல் நடைபெற்றது.

மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட வரலாற்றுசிறப்புமிக்க தலமாக ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயம் விளங்கிவருகின்றது.

இராம பிரானால் வழிபடப்பட்டதும் இலங்கையினை எரித்த அனுமான் தனது வாலின் தீயை அணைத்த இடம் என்ற சிறப்பினைக்கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

பத்து தினங்கள் நடைபெற்ற ஆலயத்தின் மஹோற்சவத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சப்புரத்திருவிழாவும் நேற்று தேர் உற்சவமும் நடைபெற்றது.

இன்று காலை மாமாங்கேஸ்வர மூர்த்திக்கு விசேட அபிசேக ஆராதனை நடைபெற்று திருப்பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து வசந்த மண்;டபத்தில் எழுந்தருளிய மாமாங்கேஸ்வரனுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து வெளிவீதி வந்த மாமாங்கேஸ்வரர் எருது வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தக்கரைக்கு சென்றார்.

தீர்த்தக்கரையில் நடைபெற்று விசேட பூஜைகள் மற்றும் அபிசேக ஆராதனையினை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானோர் தீர்த்தக்கரையினை புடைசூழ தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

தாய்தந்தையரை இழந்தவர்கள் அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிதிர்க்கடன்களை தீர்க்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.

இன்றைய தீர்த்தோற்சவத்தில் வடக்கு தெற்கு என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.