பழுத்த அரசியல் தலைமைத்துவங்கள் இளையவர்களுக்கு வழிகாட்டியாகவும் வழிவிடுபவர்களாகவும் இருக்க வேண்டும்.




மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு கொத்தியாபுலை செழுஞ்சுடர் இளைஞர் கழகத்தின் செயலாளராக இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தினதும் கிழக்கு மாகாணத்தினதும் முதல் பெண் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர் செல்வி அருள்நாயகம் தர்ஷிக்கா.

இலங்கை பாராளுமன்றத்தில் முதலாவதாக
மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பெண் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்பட்ட மண்முனை மேற்கு பிரதேசத்திலிருந்து கடந்த 2016ம் வருடத்தில் நடைபெற்ற இலங்கையின் நான்காவது இளைஞர்பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் வரலாற்றில் இன்னுமொரு தடத்தை பதித்திருக்கிறார்  செல்வி அருள் நாயகம் தர்ஷிக்கா.

மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் மண்முனை வடக்கு , காத்தான்குடி  மண்முனைப்பற்று ஆரையம்பதி , மண்முனை மேற்கு போன்ற பிரதேசங்கள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

நான் 1200  வாக்காளர்களை கொண்ட பிரதேசத்தில் இருந்து கொண்டு 1800 வாக்காளர்களை கொண்ட மண்முனை வடக்கு பிரதேசத்துடன் போட்டியிட்டேன்.

மண்முனை வடக்கு தவிர ஏனைய பிரதேசங்கள் வாக்காளர்கள் குறைவு அந்த வகையில் எனக்கு ஏனைய பிரதேசங்கள் பெரிதாக சவாலாக இருக்கவில்லை.

பெரிதும் சவாலாக இருந்தது மண்முனை வடக்கு பிரதேசம் , அந்த பிரதேசத்தில் போட்டியிட்ட துடிப்புள்ள வேட்பாளரான அந்த இளைஞனை நான் ஒரு பெண்ணாக வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கினேன்.

எனது பிரதேசத்தில் தகுதியுடைய 1200 வாக்குகளும் மொத்தமாக வாக்களிக்கப்படவேண்டும், அதுவும் எனக்கே அளிக்கப்பட வேண்டும், இதற்கிடையில்  எனது பிரதேசத்தில் இன்னும் சில வேட்பாளர்கள், சிக்கலான நிலமைதான், கலந்துரையாடி அவர்களை தேர்தலில் இருந்து பின்வாங்க செய்தேன்.

இந்த நிலையில் 650 தொடக்கம் 700 வாக்குகள் ஏனைய பிரதேசமான மண்முனை வடக்கு, ஆரையம்பதி காத்தான்குடியிலிருந்து பெறவேண்டும், அப்போதுதான் வெற்றிபெற முடியும் என்ற கட்டாய சூழ்நிலை.

இது ஒரு தொகுதிக்குள் நடைபெறும் தேர்தல் என்றாலும், தொகுதிக்குள் வரும் பிரதேசங்களுக்குள்ளே பிரதேச ரீதியாக பலத்தபோட்டி நிகழும் போது ஒரு பிரதேசத்தில் உள்ள வாக்காளர்களான இளைஞர்கள் ஏனைய பிரதேச வேட்பாளர்களுக்கு வாக்குகளை செலுத்த விரும்பமாட்டார்கள்.

இந்த நெருக்கடியான சூழலில் சகோதரர் செல்வன் ரி.விமல்ராஷ் தலைமையிலான மண்முனை மேற்கு பிரதேச இளைஞர்கழக சம்மேளனம் புத்திசாதுர்யமாக செயற்பட்டு  ஆரையம்பதி பிரதேசத்திலிருந்து கனிசமான வாக்குகளை பெற்று நான் வெற்றிபெற பெரிதும் உறுதுணையாக இருந்தனர்.

அதேபோன்று மண்முனை வடக்கு பிரதேசத்திலிருந்தும் கனிசமான வாக்குகளை பெற முடிந்தது.

இந்த வெற்றியினால்  எனது விடாமுயற்சி தன்னம்பிக்கை பெண்களினாலும் முடியும் என்ற விடயங்களை எடுத்துகாட்ட முடிந்ததோடு,

எனது வெற்றிக்கு  ஆலோசனை வழிகாட்டல் உதவி ஒதுழைப்பு நல்கியது எனது பிரதேசத்தின் முன்னால் இளைஞர் சேவை அதிகாரியும் முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவருமாகிய மா.சசிக்குமார், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி, வவுணதீவு அபிவிருத்தி நிறுவனம்,  அதன் நிருவாகிகள் , மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிருவாகிகள், ஆரையம்பதி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி, ஆரையம்பதி பிரதேச சம்மேளனம் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.


இவ்வாறு தனது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் அனுபவம் தொடர்பாக  மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்  செல்வி அருள்நாயகம் தர்ஷிக்கா சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட நேர்காணலில் குறிப்பிடுகிறார் .

   செல்வி  தர்ஷிக்கா கொத்தியாபுலை கிராமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்.

முன்பள்ளிப் கல்வியை கொத்தியாபுலை சரஸ்வதி பாலர் பாடசாலையிலும் தரம் 1-7 வரையான கல்வியினை மட்/கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலயத்திலும், தரம் எட்டில் இருந்து கா.பொ.த.உயர்தரம் வரை மட்/விவேகானந்தா மகளீர் கல்லூரியிலும் கல்வி கற்றுள்ளார்.

2013ம் ஆண்டு உயர்தரக்கல்வியை முடித்தவுடன் கணணி துறையில் ஆர்வம் இருந்ததால் மஞ்சந்தொடுவாய் தொழிநுட்ப கல்லூரியில்  ஒரு வருடம் கணணி கற்கையை பயின்று மண்முனைமேற்கு பிரதேச செயலகத்திலும்,  திவிநெகும சமூர்த்தி சங்கத்திலும்  ஒரு வருட  காலம் பயிற்சி பயிலுனராக பயிற்சி பெற்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து மட்/கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலயத்திலும் தொண்டர் ஆசிரியராக கற்பித்துள்ளார்.

பேராதனை   பல்கலைக்கழகத்தின் 2ம் வருட மாணவியாக கல்வி பயின்று வரும் தர்ஷிக்கா மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அபிரியல் (AFRIEL) நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளராக  செயற்பட்டு வருகிறார்.

அத்தோடு தனது சொந்த கிராமத்திலும் பிரதேசத்திலும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் தன்னால் முடிந்தளவு இளைஞர் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டு வரும் தர்ஷிக்கா அவர்களுடனான நேர்காணல்  தொடர்ந்து.


இளைஞர் பாராளுமன்ற பிரவேசம்  தொடர்பாக குறிப்பிட முடியுமா?

நிச்சயமாக  , உண்மையில் எனது இளைஞர் பணி எனது கழகத்திற்குள் மட்டுமே  காணப்பட்டது. எங்களுக்கு கிடைத்த பிரதேச   இளைஞர்சேவை உக்தியோகத்தர்  எங்களது பிரதேச இளைஞர், யுவதிகளை நல்லதொரு இடத்திற்கு கொண்டுவரவேண்டும் என்ற ஆர்வத்துடன் செயற்பட்டார்  இதன் காரணமாக 2016ம் ஆண்டு இடம்பெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் பெண்வேட்பாளராக போட்டியிட்டு பல சவால்களுக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தொகுதியில் இலங்கையில் இரண்டாவது இடத்தைப் பெற்று தெரிவானேன்.

இளைஞர் பாராளுமன்றத்தில் உங்களது பிரதிநிதித்துவம் என்ன? எத்தகையது? 

இளைஞர் பாராளுமன்றத்தில் உள்ள பத்து அமைச்சில் நான் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இருக்கின்றேன்.

இந்த நாட்டின் இளைஞர்களது விளையாட்டு துறைசார்  ஆளுமை திறமைகளை வளர்த்துக் கொள்வும், அதனூடாக அரசியலை கற்பதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோன்.



இளைஞர் பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பாக குறிப்பிட முடியுமா?

ஆம், இளைஞர்பாராளுமன்றமானது தேசிய பாராளுமன்றத்தைப் போன்றது பிரதமர் அதிகாரம் கொண்டதாகவும் பத்து அமைச்சுக்களையும், பிரதி அமைச்சர்களையும் கொண்டு காணப்படுகின்றது.

பாராளுமன்ற அமர்வு இரண்டுமாதங்களுக்கு ஒரு தடவை இரண்டு நாள் நடைபெறும்.

 அத்தோடு நாம் பேசுவதற்கான தலைப்பையும் பாராளுமன்ற திகதியையும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முன்கூட்டியே அறிவிக்கும்.

இதனால் எமது பிரதேச மாவட்ட மட்டத்தில் இருக்கும் பிரச்சனைகளை கதைக்க முடியும்.
வாத பிரதிவாதங்களை மேற்கொள்ளவும் சந்தர்ப்பங்களும் உண்டு.

அத் தலைப்புக்குள்ளே ஒரு சில பிரச்சனைகளை கதைக்க முடிகின்றது. மேலதிகமாக கதைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்க பெறுவதில்லை.

அத்தோடு இளைஞர்பாராளுமன்றத்தில் நடைபெறுகின்ற விவாதங்கள் கன்ஷாட்டின் ஊடாக இலங்கை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

எமது அமர்வுகள் நடைபெறும் போது தேசிய பாராளுமன்ற அமைச்சர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் பாடசாலை மாணவர்கள், இந்தியா உட்பட பன்நாட்டு பிரதிநிகளும் கலந்து கொள்கின்றார்கள்.

கடந்த அமர்வுகளின் போது வெளிநாட்டு பிரதிநிதிகள், ஜக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளும்  கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

அதே போன்று ஊருக்கு ஒரு கோடி அபிவிருத்தி செயற்றிட்டமும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.


இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக இளைஞர்பாராளுமன்றத்தில் உங்களது செயற்பாடு?

நான் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் உள்ளேன் எனது அமைச்சின் கீழ் மகரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் பெரிய அளவிலான கிறிக்கட் சுற்றுப்போட்டி ஒன்றினை நாடாத்தினோம்.

அத்தோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டு போட்டிகள், பயிற்சி முகாம்களையும் நடாத்திக் கொண்டு வருகிறோம் இன்னும் பல முகாம்களை நடாத்த தீர்மானித்துள்ளோம்.

அந் வகையில் 05.06.2018 அன்று குருநாகல் மாவட்டத்தில் கல்கமுவ பிரதேசத்தில் 02 நாட்கள் பல விளையாட்டு போட்டிகளை நடாத்தினோம்.

முதலாவது நாள் அங்கு உள்ள அனைத்து இளைஞர் கழகங்களையும் ஒன்றினைத்து கிறிக்கட் சுற்றுப்போட்டி நடாத்தி வெற்றிபெற்ற இளைஞர் கழகங்களுக்கு பெறுமதிமிக்க கேடயம் மற்றும் சான்றிதழ்களோடு விளையாட்டு உபகரணம் என்பனவற்றையும் வழங்கினோம்.

இரண்டாவது நாள் தமிழ்,சிங்கள,முஸ்ஸிம் பாடசாலை மாணவர்களுக்கு பலதரப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு பயிற்சிகளை வழங்கினோம். 

அடுத்த கட்டமாக மட்டக்களப்பிலும் பெரியளவிலான விளையாட்டு போட்டிகளை நடாத்த தீர்மானித்துள்ளோம்.

     2017ம் வருடம்  எனக்கு கிடைத்த   சிரமசக்தி வேலைத்திட்டம்  மூலம்   மட்/கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலய மைதானத்தை புணரமைப்பு செய்திருக்கின்றேன்.


இவ்விடத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களைப் போன்று எமக்கு நீதி ஒதுக்கீடுகள் எதுவுமில்லை நாங்களே சுயமாக  நீதியினை தேடிக்கொள்ள வேண்டும்.



இலங்கை இளைஞர் அபிவிருத்தி தொடர்பாக அதன் முன்னேற்றம் தொடர்பாக உங்களால் குறிப்பிடமுடியுமா?

திருப்திகரமானது என எதனையும் என்னால் குறிப்பிட்டு கூறமுடியது.

எமது நாட்டில் இளைஞர் அபிவிருத்திக்கு போதியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நான் உணரவில்லை.

இந்த சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்படும் நாளிலிருந்தாவது நமது தலைமைகள் இளைஞர்களுக்கான இடத்தினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.

“உலகலாவிய நாடுகளை ஒப்பிட்டு பாருங்கள்” அந் நாடுகளின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் வகிபங்கு கூடுதலாக உள்ளது. 

எமது நாட்டில்  கல்வி அறிவு மட்டம் அதிகமாக இருந்தும் அதற்கு தகுந்த வேலை யாருக்கும் கிடைப்பதில்லை அத்தோடு எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி, விலைவாசி அதிகரிப்பு இவ்வாறு பல பிரச்சிணைகள் காணப்படுகையில் நாடு அபிவிருத்தி அடைவது எவ்வாறு?

இளைஞர்களுக்கென தனியான அமைச்சு காணப்பட்டாலும் இன்னும் இளைஞர் அபிவிருத்தியில் முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. 

இளைஞர்களின்  ஆளுமை,மனப்பாங்கு,  திறமைகளிலே ஒருநாட்டின் வளர்ச்சி காணப்படுகின்றது இல்லையா?

இளைஞர் சக்தியை எந்த நாடு சிறந்த மூலதனமாக பயன்படுத்த முற்படுகிறதோ அந்த நாடு முன்னேறும் இல்லையென்றால் கடந்தகால படிப்பினைகள் கற்றுத்தந்த பாடத்தை நாங்கள் யாரும்  மறக்க மறுக்க முடியாது. 

அரசியலில் பழுத்த முதிய தலைமைத்துவங்கள் எதற்கு அவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஆலோசனை வழிகாட்டல் செய்பவர்களாக மாற வேண்டும், அதன் மூலம் தான் இளைஞர்களின் சக்தியை வளத்தை பெற்று நாடு பொருளாதாரத்திலும், அரசியலிலும், அபிவிருத்தியிலும் முன்னோக்கி நகர முடியும்.

ஒன்றை நாங்கள் சிந்திக்க வேண்டியுள்ளது, ஒரு அரசியல் தலைமை பலவருடங்கள் ஒரு கட்சியின் தலைவராக, நீண்ட காலமாக பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்தார் என்பதன் மூலம் அவரோ, நாமே பெருமை கொள்ள முடியாது. அந்த தலைமைத்துவங்கள் எமது நாட்டை மூன்று தசாப்த காலத்திற்கு பின் கொண்டு சென்றது என்பதுதான் நிதர்சனம்.

தேசிய இளைஞர் சேவை மன்றம் தொடர்பாக?

தெற்காசியாவில் பலமிக்க இளைஞர் வலையமைப்பைக்கொண்ட நாற்பது இலட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர்,யுவதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நிறுவனமாக தேசிய இளைஞர்சேவை மன்றம் திகழ்கின்றது.

தேசிய இளைஞர் சேவை மன்றமானது இந்த நாட்டின் இளைஞர் அபிவிருத்திக்காக  பல வேலைத்திட்டங்களை செய்து கொண்டு வருகிறது. 

சிரமசக்தி  வேலைத்திட்டம். 
யொவுன் புரய தேசிய வேலைத்திட்டம்.
இளைஞர் முகாம்கள்.
ஊடக பயிற்ச்சி செயலமர்வு, பயிற்சி நெறிகள்.
தேசிய தைப்பொங்கல் விழா.
தேசிய புதுவருட சித்திரை விழா.
தேசிய நத்தார் பண்டிகை.
தேசிய விளையாட்டு விழா.
இளைஞர் பாரளுமன்றம்.
தேசிய சம்மேளனம்.
தேசிய காலாசார நிகழ்வுகள் .
கலாச்சார போட்டிகள்.
சர்வதேச மற்றும் உள்நாட்டு இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம்.
நிப்போன் மாறு வேலைத்திட்டம்.


இவ்வாறு பல வேலைத்திட்டங்களை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இந்த நாட்டு இளைஞர்களினது முன்னேற்றத்திற்க்காக நடைமுறைப்படுத்தி வருகின்றது.


உங்களால் இளைஞர் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினூடக உங்களுக்கு வாக்களித்த இளைஞர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யமுடிகிறதா? 

இல்லை எதிர்பார்த்த அளவுக்கு எம்மால் எமக்கு வாக்களித்த இளைஞர்களின்  எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யமுடியவில்லை. 

நான் முன்பு குறிப்பிட்டது போன்று  எந்தவொரு வேலைத்திட்டம் செய்ய வேண்டுமானலும் நீதி தேவை எமக்க நீதி ஒதுக்கீடு எதுவும் இல்லை.

  இருந்தும் எங்களது சுய முயற்சியினால் நிதிகளை தேடி சிறியளவிலான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.


எத்தனையோ இளைஞர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாமை மனவேதனையாக உள்ளது.

எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு பிரதிநிதிகளுக்கம் குறைந்தது 10இட்சமாவது நிதி ஒதுக்கீடுகளை செய்வதற்கு அரசு முன்வர வேண்டும்.


உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்க்காக உங்களுக்கான அழைப்புக்கள் வந்ததாக நான் அறிகிறேன்?

ஆம் ஐக்கியதேசியக்கட்சியினால் அழைப்பு வந்தது நிராகரித்து விட்டேன்.  

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக எனது பெயர்  சிபார்சில் இருந்த போதும் கூட்டமைப்புக்குள்ளிருந்த கட்சிகள் ஆசன ஒதுக்கீட்டில் பிரதேச வட்டாரங்களை பிரித்துக்கொண்ட முறமையினால் எனக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பு கைநழுவிப்போனது. 


நீங்கள் இந்த மாவட்டத்தின் இளைஞர் அபிவிருத்திக்கென  விசேடமாக எதிர்கால திட்டம் எதனையும் வைத்திருக்கிறீர்களா? 

முடிந்தளவு எமது இளைஞர் அபிவிருத்தியில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பது எனது நோக்கம் .

அந்த வகையில்  நாங்கள் 10பேர் கொண்டு ஏழு குழுக்களை   அப்ரியல் ( AFRIEL) நிறுவனத்தின் அனுசரனையில்  ஆரம்பித்துள்ளோம்.

அந்த அமைப்பின் மூலம் எதிர்வரும்  காலங்களில் கிராம  மட்டத்தில் இளைஞர்கள் , பெண்களுக்கு காணப்படும் பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியாக தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முன்வந்திருக்கிறோம். 

தற்போது கிராம மட்டத்தில் மூன்று சட்ட ஆலோசனை கருத்தரங்குகளை நடாத்தியிருக்கிறோம். 

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் அறியும் சட்டத்தினை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை அப்ரியல் நிறுவனத்தோடு சேர்ந்து மேற்கொள்ளுகின்றோம்.

அத்தோடு மண்முனை மேற்கு பிரதேசத்தில்   பாடசாலை மாணவர்களுக்கு  பிரத்தியோக வகுப்புக்களையும் , கருத்தரங்குகளையும் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.


அத்தோடு ஆறுமாத கால மனித உரிமைகள் கற்கை பாடநெறி  நெறி ஒன்றினை  வெற்றிகரமாக நடாத்தி முடித்திருக்கிறோம். விரைவாக இரண்டாம் கட்டமாக அதே பாடநெறியினை ஆரம்பிக்கவுள்ளோம். இப்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

இன்னும் பல்வேறு இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்ய தீர்மானித்துள்ளோம். சம்மந்தப்பட்டவர்களிடமிருந்தும் அதற்கு போதிய உதவி ஒத்துழைப்புக்களும் கிடைக்கவேண்டும். 

நீங்கள் குறிப்பிட்டீர்கள் நமது நாட்டில் கல்வியறிவு வளர்ச்சி வீதம் உயர்மட்டத்தில் இருக்கிறது அதற்கேற்ப வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை என்று. இங்கே படித்த பட்டதாரிகளுக்கே வேலை வாய்ப்பில்லையே?  அவர்களின் போராட்டம் பலநூறு நாட்கள் தொடர்ந்தது,   இன்று நீதி மன்றத்திற்கும் ஏறி இறங்குகிறார்கள் அது மாத்திரமின்றி பல போட்டிப் பரீட்சை நேர்முகத்தேர்வு என அலைக்கழிக்கப்படுகின்றனரே?

நிச்சயமாக உண்மையில் மனவேதனையான விடயம்தான், இது தொடர்பாக நான் பதில் வழங்குவது எவ்வளவு பொருத்தமாக இருக்குமென சிந்திக்கிறேன்.

நானும் தற்போது பட்டக் கற்கை ஒன்றை தொடர்ந்து கொண்டிருக்கிறேன், நானும்  எதிர்காலத்தில் இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழலலுக்கு தள்ளப்படவும் கூடும், ஆனாலும் நான் ஒரு யுவதியாக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக அதுவும் பெண்ணாக இது தொடர்பாக சில விடயங்களை பதிவு செய்ய விரும்புகிறேன். 

இன்று நமது நாட்டில் படித்த,  படிக்காத , பட்டம்பெற்ற  சகலருக்கும் அரசதொழில் என்ற மாயை தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது, எல்லோருக்கும் அரச தொழில் ஒன்றே இலக்காக உள்ளது. 

அந்த வகையில் பட்டதாரிகள் தமக்கு அரசு தொழில் வேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனாலும் அரச தொழில்தான் வேண்டுமென்றால், அரசும் எல்லோருக்கும் அரசதொழில் கட்டாயம்  வழங்க வேண்டும் என்றால் அது முடியுமா? சாத்தியமா?

அதே நேரத்தில் தனியார் துறையில் வேலைவாய்ப்பு என்பது அதிக அளவில் காணப்படுகிறது. எப்போதும் அதற்கான கேள்விகள் அதிகமாகவே இருந்து வருகிறது. எனவேதான் யாவரும் தனியார் துறையினரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தமது தகமைகளை வளர்த்துக்கொண்டு அந்த தொழிற் சந்தைக்கு ஏற்ப தங்களை தயார் படுத்த வேண்டியுள்ளது.

இந்த இடத்தில் இன்னுமொரு முக்கியமான விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நமது நாட்டில் இளைஞர் பரம்பரையினர்க்கென ஒரு கொள்கை தயாரிக்கப்பட்டது கடந்த ஆட்சியில், அப்போதைய இளைஞர் விவகார அமைச்சர் கெளரவ டலஸ் அழகபெரும அவர்களினால் கொழும்பு சுகததாச அரங்கில் வைத்து வெளியிடப்பட்டது. (2014)

அந்த கொள்கைத்திட்டம் எந்தளவு தூரத்திற்கு இந்த நாட்டு இளைஞர் பரம்பரையினருக்கு சாதகமானது என்பதையும், நடைமுறைப்படுத்தவும் படுகிறதா என்பதை அறியமுடியவில்லை.  

மேலும் இறுதியாக கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் அவர்களும் கிழக்குமாகாண இளைஞர்களுக்கென ஒரு இளைஞர் கொள்கையை தயாரிப்பதற்கென நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார் அந்த நடவடிக்கை வெற்றியளித்ததா? அல்லது கிழக்கு மாகாணத்துக்கென தனியான இளைஞர் கொள்கை வெளியிடப்பட்டதா அறியமுடியவில்லை.

இறுதியாக  இளைஞர்களுக்கு  குறிப்பிடவிரும்புகிறீரா?


வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் மும்மொழிகளைக் கற்றுக்கொண்டு சந்தர்ப்பங்களை தேடிச்செல்ல வேண்டும்.

வாழ்க்கையை வெற்றிகொண்ட இளைஞர், யுவதிகள் சமூகத்தையும்,நாட்டையும் கட்டியெழுப்ப முன்வர வெண்டும் என்று கூறிக்கொண்டு    இந்த சர்வதேச இளைஞர் தினத்தின் கருப்பொருளை ஒவ்வொரு இளைஞனும் வெற்றிகொள்ள வாழ்த்துக்களையும் பிரார்த்தனையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.