மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி வங்கிகளில் 3520 மில்லியன் ரூபா நிதி மக்களுக்கு வழங்காமல் சேமிப்பில் உள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளில் 3520 மில்லியன் ரூபா நிதி சேமிப்பில் உள்ளது இந்த நிதியினை குறைந்த வட்டியில் மக்களுக்கு வழங்காமல் ஒரு சில அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் துஷ்பியோகம் செய்கின்றார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோககேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நலிவுள்ளோர் சங்கத்தினால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கிண்ணையடி கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் சனிக்கிழமை(18) நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் - மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி வங்கிகளில் 3520 மில்லியன் ரூபா பணம் சேமிப்பில் உள்ளது இந்த பணத்தை குறைந்த வட்டியோடு மக்களுக்கு வழங்காதமையின் காரணமாக எமது உறவுகள் கூடிய வட்டியில் நுண்கடன் நிதிநிறுவனங்களில் கடன் பெற்று தற்கொலை செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்

சில சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வெளிநாடு சென்றவர்களின் பெயர்களில் கடனை பெற்று தமது தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றார்கள். சில இடங்களில் போலியாக கையொப்பமிட்டு பணம் பெறப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக சமுர்த்தி சமூக நிதியில் 57 இலட்சம் பணம் திருடப்பட்டு சமுர்த்தி உத்தியோகத்தர் உட்பட 8 பேர் பிடிபட்டுள்ளனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி வங்கிகள் தொடர்பாக ஆராய்ந்து பணத்தை கையாடல் செய்துள்ளவர்கள் தொடர்பாக நடவடிக்கையெடுக்கப்படும் என அமைச்சர் என்னிடம் உறுதியளித்துள்ளார். மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டு வேலையிலிருந்து நிறுத்தப்படுவார்கள்.

சமுர்த்தி சுயதொழியல் உதவிகள் சரியானமுறையில் ஆரய்ந்து வழங்கப்படுவதில்லை. சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் வேலை செய்வதற்கு அனுமதிக்க முடியாது அவர்கள் உள்ளக இடமாற்றத்துக்குட்படுத்தப்பட வேண்டும்.

காணாமல் போன உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி எமது உறவுகள் நீண்ட போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ள போதிலும் அரசாங்கம் அதனைக் கண்டும் காணாமல் இருக்கிறது. 

நாட்டில் பல ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் ஆனால் தமிழ் ஊடகவியலாளர்கள் சார்பாக எந்தவித விசாரணைகளும் நடைபெறவில்லை ஆனால் சிங்கள ஊடகவியாளர் காணாமல் போனமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியிடமும் வாக்கு மூலம் பெறுகிறார்கள்.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் 36 ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் இவர்களில் தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பாக எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்திலே கூடிய பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளன இவர்களுக் சரியான வாழ்வாதாரத் திட்டங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.

 இன்னும் புலம் பெயர் உறவுகளை நம்பியே வாழ வேண்டிய நிலை உள்ளது. எமது மக்களின் கல்வி வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப உதவும் எமது புலம்பெயர் உறவுகளுக்கு எப்போதும் நன்றியுடையவர்களாக நாங்கள் இருக்கிறோம்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மேலத்தேய நாடுகளுக்கு சென்றவர்கள் சிலர் மாத்திரமே மாவட்ட மக்கள் மீது கரிசனை கொண்டு அவர்களின் கல்வி வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப உதவுபவர்களாக உள்ளார்கள்.