அமைச்சர் விஜயகலா அவ்வாறு பேச யார் காரணம்? உண்மை இதுதான்.

விஜயகலா அவர்கள் தொடர்பான சர்ச்சை தொடர்பில் பெருந்தேசியக் கட்சிகளில் தம்மை இணைத்துக் கொண்ட தமிழர்கள் தெளிவடைய வேண்டும்…

(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி.துரைராசசிங்கம்)

விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் தொடர்பான சர்ச்சை என்பது தனி நிகழ்வொன்றாக பார்க்கப்படக் கூடாது.

இந்த நாட்டில் தமிழர் தம் தனித்துவ அரசியல் என்கின்ற விடயத்தை வலியுறுத்தும் மற்றுமொரு வரலாற்றுப் பதிவாகவே பார்க்கப்பட வேண்டும்.

எனவே பெருந்தேசியக் கட்சிகளில் தம்மை இணைத்துக் கொண்ட தமிழர்கள் தெளிவடைந்து தமிழ்த் தேசியத்தின்பால் ஒன்றுபட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

அண்மையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் தொடர்பான சர்ச்சை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் தொடர்பான சர்ச்சை என்பது தனி நிகழ்வொன்றாக பார்க்கப்படக் கூடாது.

இது இந்த நாட்டில் இன்றியமையாததாகக் கருதப்படும் தமிழர் தம் தனித்துவ அரசியல் என்கின்ற விடயத்தை வலியுறுத்தும் மற்றுமொரு வரலாற்றுப் பதிவாகவே பார்க்கப்பட வேண்டும்.

பெருந்தேசிய  அரசாங்கங்களோடு பயணிக்க முனைந்த தமிழ் அரசியலாளர்கள் மற்றும் அரசியல் சார்பான பதவி வகித்தோரின் முன்னுதாரணங்கள் இவற்றையே செப்பி நிற்கின்றன.

பிரதேசவாரி பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்ட போது கொழும்பு மத்தி தொகுதி தமிழர்களுக்குத் தரப்பட வேண்டும் என்ற வாக்குறுதியை அன்றைய பெருந்தேசிய வாதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த இலங்கைத் தேசிய காங்கிரஸ் மறுத்தமை எமது வரலாற்றில் முதுலாவது அரசியற் பாடமாகும்.

அப்போதுதான் சேர்.பொன்.அருணாசலம் அவர்கள் தமிழர்களுக்கென்று தனியான அரசியல் இயக்கம் தேவை என்பதை வெளிப்படுத்தி இலங்கைத் தமிழர் மகாசபையைத் (சிலோன் தமிழ் லீக்) தோற்றுவித்தார்.

 அதைத் தொடர்ந்துதான் இலங்கைத் தமிழர்களுக்கான தனி அரசியற் கட்சி தோற்றம் பெற்றது.

அபிவிருத்தியைத் தமிழ்ப் பிரதேசங்களுக்குக் கொண்டு வரும் நோக்கில் ஜி.ஜி.பொன்னம்பலம், சி.சுந்தரலிங்கம் போன்றோர் அமைச்சுப் பதவிகளை ஏற்று தேசிய அரசுகளோடு சேர்ந்து செயற்பட முனைந்த போது தமிழர் உரிமை என்ற மூச்சுக் காற்று விடப்பட்ட நேரங்களில் எல்லாம் அவர்கள் புறந்தள்ளப்பட்டார்கள்.

 மு.திருச்செல்ம் அவர்கள் கூட தேசிய அரசியலில் இணைந்து செயற்பட்டு அரசியல் உரிமையை வென்றெடுக்க முயன்ற காலத்தில் தமிழர் தொடர்பான குறிப்பான விடயத்தை முன்வைத்த போது அது அங்கீகரிக்கப்படாமையால் அரசை விட்டு வெளியேற நேர்ந்தது.

இவ்வகையில் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளாது நல்லிணக்கத்தை வளர்த்து அரசாங்கத்திற்கு வெளியில் நின்று உரிமைகளை வென்றெடுப்பதை தனது அரசியல் மூலோபாயமாகக் கொண்டு செயற்படுகின்றது.

அந்தவகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அவர்கள் தொடர்பான விடயங்கள் இத்தொடர் வரலாற்றில் இன்னொரு அத்தியாயமாகவே அமைகின்றது.

நாட்டு நலன் என்பதைக் கடந்து பெருந்தேசியத்தில் குவிந்துள்ள வாக்குகளை மூலதனமாகக் கொண்டதாகவே பெருந்தேசியக் கட்சிகளின் அரசியல் அமைந்திருக்கின்றன.

எனவே தமிழர்கள் தமக்கான தனித்துவமான அரசியல் ஒன்று இருக்கின்றது என்ற யதார்த்தத்தை உணர்ந்துகொண்டு ஒரே அணியில் நின்று தமிழர்தம் உரிமையை வலியுறுத்தவதனால் மட்டுமே தமிழர்தம் உரிமையை வென்றெடுக்காலம் என்பதையே இவையெல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

குறுகிய கால, நீண்டகால, அவ்வப்போதைய எப்பிரச்சனையாக இருந்தாலும் தமிழர்களுக்கான தனித்துவத்தை வெளிக்காட்டும் போதெல்லாம் தன்னுள் ஒரு அங்கமாக நின்று அவ்வாறு அடையாளம் காட்ட முற்படுவோரை புறந்தள்ளுவதன் மூலமே பெருந்தேசியம் தனது இருப்பை தக்கவைத்துக் கொள்கின்றது.

இவற்றின் அடிப்படையில் தமிழர்தம் அரசியலின் தனித்துவத்தை உளங்கொண்டு நமது பலத்தை நமது அடையாளத்தினூடாக வெளிக்காட்டுவதன் மூலமே நமது பலத்தின் இன்றியமையாமையை பெருந்தேசியம் உணரும் வகையில் செய்ய முடியும்.

இச்செயற்பாட்டின் மூலம் தான் இலங்கைத் தமிழர்களாகிய நாம் நமது உரிமையை வென்றெடுக்க முடியும் என்பது வெளிப்படை.

இவ்வகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அவர்களும், பெருந்தேசியக் கட்சிகளில் தம்மை இணைத்துக் கொண்ட தமிழர்களும் தெளிவடைந்து தமிழ்த் தேசியத்தின்பால் ஒன்றுபட வேண்டும் என்பதையே இராங்க அமைச்சரின் ஆதங்க வெளிப்படுத்தலும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளும் எடுத்துக் காட்டுகின்றன.