பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

கிழக்கிலங்கையின் பிரசித்திபெற்ற முருகன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் எல்லையாக விளங்கும் பெரியகல்லாறு இரண்டு பக்கங்களினாலும் நீரினாலும் சூழப்பட்ட பெரியகல்லாறு எனும் பதியில் நீண்டகாலமாக முருகப்பெருமான் சிவசுப்ரமணியராக அருளாட்சி செய்துவருகின்றார்.

இன்று காலை விசேட விநாயகர் பூஜைகளுடன் ஆரம்பமான கிரியைகளுடன் கொடிக்கு விசேட பூஜை நடைபெற்றதுடன் யாகம் மற்றும் மூலமூர்த்திக்கு அபிசேகம் என்பன நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று வேத,நாத,ஆரோகரா கோசத்துடன் பூமழை பொழிய கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

கதிர்காமக்கந்தனின் தீர்த்தோற்சவத்திற்கு செல்லமுடியாத பக்தர்களுக்கு கதிர்காம கந்தனாக நின்று தீர்த்தோற்சவத்தினை காட்டிவரும் ஆலயமாகவும் இந்த ஆலயம் விளங்கிவருகின்றது.

வருடாந்த மஹோற்சவத்தில் தினமும் தம்பபூஜை,வசந்த மண்டபூஜை,அபிசேகம்,யாகம் மற்றும் சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா என்பன நடைபெற்றுவருகின்றது.

இன்று ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவமானது பத்து தினங்கள் நடைபெறவுள்ள நிலையில் எதிர்வரும் 27ஆம் திகதி தேர் உற்சவம் நடைபெறவுள்ளதுடன் 28ஆம் திகதி காலை ஆடிவேல் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.