மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பகுதிகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு குழுக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அவர்களின் எதிர்கால செயற்பாடுகளை சிறப்பான முறையில் கொண்டுசெல்லும் வகையிலும் குழுக்களை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி அபகரிப்பு மற்றும் கலாசார ரீதியான பிரச்சினைகளையும் எந்தவித அபிவிருத்திகளையும் எதிர்நோக்காத பகுதிகளை இனங்கண்டு அவற்றில் இந்த குழுக்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின் முயற்சியினால் இந்த குழுக்கள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சவுக்கடி மற்றும் சிவபுரம் ஆகிய பகுதிகளை இணைத்து “சவுக்கடி கிராம மேம்பாட்டு அமைப்பு” என்னும் பெயரில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் உள்ள மதத்தலங்கள்,மீனவர் சங்கங்கள்,கிராம அபிவிருத்தி சங்கங்கள்,விளையாட்டு கழகங்கள்,இளைஞர்கள் கழகங்கள்,பொது அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளைக்கொண்டு இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூட்டம் நேற்று திங்கட்கிழமை மாலை சவுக்கடி கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

சவுக்கடி பகுதியில் அண்மைக்காலமாக வேகமாக நடைபெற்றுவரும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்தவும் குறித்த பகுதியில் இனங்களிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்தி செல்லும் வகையிலும் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த காலத்தில் எந்த அபிவிருத்தியையும் காணாத பகுதியாக உள்ள நிலையில் அவற்றின் ஊடாக அரச அதிகாரிகளை ஒருங்கிணைத்து எதிர்காலத்தில் செயற்பாடுகளை முன்கொண்டுசெல்லும் வகையில் செயற்படுவது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

குறித்த பகுதியில் உள்ள மக்களின் எதிர்கால சந்ததியினருக்கு இல்லாத வகையில் காணிகள் அபகரிக்கப்படுவதாகவும் அதற்கு இங்குள்ள தமிழ் அரச உத்தியோகத்தர்கள் சிலரும் உடந்தையாக செயற்பட்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

21பேர் கொண்ட அமைப்பாக இந்த அமைப்பானது பிரதேசத்தின் நிலவளத்தினையும் பிரதேசத்தின் இருப்பினையும் குறித்த பகுதியினை முன்னேற்றும் வகையிலும் இந்த சவுக்கடி கிராம மேம்பாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இங்கு தெரிவித்தார்.

அந்த அடிப்படையில் இந்த பகுதியில் ஒரு இனநல்லிணக்கம் கட்டியெழுப்பப்படவேண்டும் என்ற உயரிய நோக்குடனும் தினம் தினம் இங்கு அடாத்தான முறையில் காணி அபகரிக்கும் நிலை இருந்துவருகின்றது.ஒரு சமூகம் செறிவாக வாழும் பகுதிக்குள் இன்னுமொரு சமூகத்தினை கொண்டு அமர்த்தும்போது சில பிரச்சினைகள் ஏற்படுகின்றது.இது ஒரு வகையில் இனரீதியான வன்முறையினை ஏற்படுத்தமுனைகின்றது.இதனைதடுக்கும் நோக்குடனும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்போது சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.சவுக்கடி பிரதேச மக்கள் அவர்களுக்கான கலாசார பண்பாட்டு விழுமியங்களுடன் பரம்பரைபரம்பரையாக வாழ்ந்துவருகின்றனர்.அவற்றினை பேணும் வகையிலும் அவற்றினை தொடர்ச்சியாக பேணி எதிர்கால தலைமுறையினருக்கு கையளிக்கும் வகையிலும் ஏனைய சமூகங்களுடன் நல்லிணக்கத்தினை பேணும் வகையிலும் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சவுக்கடியில் உள்ள தமிழ் மக்கள் தங்களது காணிகளை யாருக்கு விற்பதாக இருந்தாலும் யாரிடம் இருந்து வாங்குவதாக இருந்தாலும் சவுக்கடி கிராம மேம்பாட்டு அமைப்பின் ஆலோசனையும் அனுமதியும் பெறவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் சவுக்கடி பகுதியில் உள்ள அரச காணிகளை வெளியில் உள்ளவர்களுக்கு குத்தகைக்கோ வேறு எந்த அபிவிருத்தி திட்டங்களுக்கோ அதிகாரிகள் வழங்கும்போது இந்த அமைப்பினுடைய அனுமதிபெறப்படவேண்டும்.இந்த அமைப்புக்கு தெரியாது அரச காணிகளை வெளியில் உள்ளவர்களுக்கு வழங்கமுடியாது என்ற தீர்மானமும் இங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் இஸ்லாமிய அமைப்புகளுடன் பேசி நல்லிணக்கத்தினை முன்கொண்டுசெல்லவும் இந்த அமைப்பின் ஆரம்ப கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காணிகளை பிடித்து நல்லிணக்கத்தினை குழப்பி இனவன்முறையை தூண்டும் சம்பவங்களையும் ஏற்படுத்த முனையும் நபர்களை பொலிஸார் உதவியுடன் தடுக்கவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
நல்லிணக்க செயற்பாடுகளினை மேற்கொண்டு இனவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி ஒரு நல்லிணக்கத்தினை ஏற்படுத்தவேண்டும் என்ற அடிப்படையிலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.