கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்தவர் பிள்ளையான் -வெள்ளிமலை புகழாரம்

பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் உட்பட இளைஞர்கள் விடுவிக்கப்படவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உபதலைவருமான ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.

மட்டக்களப்பில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஏற்பாடுசெய்திருந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் நேற்று காலை முதல் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்றுவந்தது.

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விடுதலையினை வலியுறுயுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இறுதியாக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் நேற்று மாலை மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உபதலைவருமான ஞா.கிருஸ்ணபிள்ளை போன்றோர் சந்தித்தனர்.

இதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிருஸ்ணபிள்ளை,
பௌத்த மதகுவு மேல் நீதிமன்றம் சென்று விடுதலைசெய்யமுடியும் என்றால், கொடூர போராட்டத்தினை செய்த ஜே.வி.பி.க்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலைசெய்யமுடியும் என்றால் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும் கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்ந்தவராகவும் உள்ள முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனை ஏன் விடுதலைசெய்யமுடியாது என்பதை இந்த அரசாங்கத்திடம் கேட்கவிரும்புகின்றேன்.


இதேபோன்று பல இளைஞர்களையும் விளக்கமறியிலிலும் தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர்.தமிழர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு வேறு ஒரு நீதியும் சிங்களவர்களுக்கு என்றால் வேறு ஒரு நீதியுமாக இந்த நாட்டில் உள்ளது.

தமிழ் மக்கள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தினை கொண்டுவந்தவர்கள். ஜனாதிபதியாக மைத்திபாலசிறிசேனவை அமர்த்தியவர்கள் தமிழர்கள்.பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் ஆட்சிபீடமேற்றியவர்கள் தமிழ் மக்கள்.ஆனால் நீதியென்பது தமிழர்களுக்கு வேறு மாற்று இனத்தவர்களுக்கு வேறு என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார்கள்.

இவ்வாறான கீழ்சிந்தனைகொண்ட நடவடிக்கைகளை நல்லாட்சியென்ற போர்வையில் உள்ள இரட்டைவேடத்தினை அகற்றி அனைவரும் இலங்கையர் என்ற எண்ணக்கருவோடு வாழ்வதற்கு ஒற்றுமையினை ஏற்படுத்தவேண்டும்.என்றார்.

இதன்போது முன்னாள் ஜோசப்பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சரை விடுதலைசெய்வதில் உங்களுக்கு ஆட்சேபனையில்லையா என இங்கு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவரை மட்டுமல்ல சிறையில் உள்ள அனைவரையும் விடுதலைசெய்யவேண்டும் என்று பதிலளித்தார்.

எனினும் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துகளுக்கு முன்னுக்கு பின்னான கருத்துகளை இங்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.