மட்டக்களப்பில் வேகமாக பரவும் டெங்கு –முன்னுதாரணமாக செயற்பட்ட கிராம அமைப்புகள்

மட்டக்களப்பு சுகாதார பிரிவில் வாரத்திற்கு 30பேர் டெங்கின் தாக்கத்திற்கு உள்ளாகிவருவதாகவும் இதனை தடுப்பதற்கு பொதுமக்கள் இணைந்து செயற்படமுன்வரவேண்டும் எனவும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.கிரிசுதன் தெரிவித்தார்.

இந்த ஆண்டு சுமார் 600பேர் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் மட்டும் டெங்கின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்குட்;பட்ட கல்லடி வேலூர் பகுதியில் டெங்கினை தடுக்கும் வகையில் அப்பகுதி பொது அமைப்புகளினால் வேலைத்திட்டங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.கிரிசுதன்,பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,கிராம சேவையாளர் என பலர் கலந்துகொண்டனர்.

கல்லடி வேலூர் பகுதியில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கம்,மாதர் அபிவிருத்தி சங்கம்,விளையாட்டு கழகங்கள்,இளைஞர்கள் கழகங்கள்,சிக்கன கடனுதவி சங்கம் என்பன இணைந்து இப்பகுதியில் நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்படுத்தும்வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

பொது அமைப்புகள் இணைந்து மேற்கொண்டுள்ள இந்த நுளம்பு கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தினை மாநகர முதல்வர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் பாராட்டினர்.

இதன்போது வீடுகள் சோதனையிடப்பட்டதுடன் கிணறுகளின் மீன் இடும் பணியையும் இளைஞர்கள் மேற்கொண்டனர்.

இதற்காக 5000க்கும் மேற்பட்ட மீன்குஞ்சுகளையும் பிரதேச மக்களே பணங்களை சேகரித்து பெற்று கிணறுகளுக்கு இடும் பணிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார வைத்திய அதிகாரி,
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் இன்றுவரையில் 600க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இரண்டு மரணங்கள் அதில் சம்பவித்துள்ளது.

பெரும்பாலான பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டின்கீழ் இந்தாலும் வாரந்தம் 30பேர் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுவருகின்றது.தற்போது சின்ன ஊறணி,சேத்துக்குடா ஆகிய பகுதிகளில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனைய பகுதிகளில் சிறியளவிலான நோயாளர்களே அறிவிக்கப்பட்டுள்ளனர்.தொடர்ச்சியான டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மூலமாகவே இந்த தாக்கத்தினை கட்டுப்படுத்தமுடியும் எனவும் தெரிவித்தார்.