மட்டக்களப்பு மாவட்டத்தில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் 6000வீடுகள் நிர்மாணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீன அரசாங்கத்தின் மூலம் 6000 வீடுகள் அமைப்பதற்கான அனுமதியை மாவட்ட அபிவிருத்திக்குழு வழங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான பிரதியமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி,அலிசாகீர் மௌலானா,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டதுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இந்த ஆண்டு 4577 மில்லியன் ரூபா பெறுமதியான 1648திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 2883மில்லியன் ரூபா ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இங்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் முன்வைக்கப்பட்டது.

இவற்றுள் இதுவரையில் 48 திட்டங்களே முடிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் 688மி;ல்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாவும் இங்கு சுட்டிக்காட்டினார்.பௌதீக முன்னேற்றம் 30வீதமாகவும் நிதி முன்னேற்றம் 15வீதமாகவும் காணப்படுவதாக இங்கு அரசாங்க அதிபர் மா.உதயகுமாரினால் சுட்டிக்காட்டப்பட்டது.

சீன அரசாங்கத்தினால் 6000வீடுகளுக்கான அனுமதிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவற்றினை 14 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் வீட்டின் தேவைப்பாடுனை பொறுத்து பிரித்துவழங்குவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்தின்போது அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீடுகள் மற்றும் ஏனைய திணைக்களங்கள் மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயப்பட்டது.