“விளாவூர் யுத்தம்” முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழகம் சம்பியன்

விளாவூர் யுத்தம் எனப்படும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு,மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளாவட்டவான் ராஜா விளையாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் விளாவூர் யுத்தம் உதைபந்தாட்ட போட்டியினாது இம்முறையும் சிறப்பாக நடாத்தப்பட்டது.

விளாவட்டவான் ராஜா விளையாட்டுக்கழகம் தனது 48வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இம்முறை நடாத்திய இந்த சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இருந்து 40 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றியிருந்தன.

கடந்த 05ஆம் திகதி இந்த சுற்றுப்போட்டிக்கான போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் இன்று திங்கட்கிழமை மாலை இறுதிச்சுற்றுப்போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த இறுதிச்சுற்றுப்போட்டியில் முதலைக்குடா விநாயகர் விளையாட்டுகழகமும் மகிழடித்தீவு மகிழை இளைஞர் விளையாட்டுக்கழகமும் மோதியது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த சுற்றுப்போட்டியல் 03-0 என்ற கணக்கில் முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது.
இந்த சுற்றுப்போட்டியின் இறுதி பரிசளிப்பு நிகழ்வு விளாவட்டவான் ராஜா விளையாட்டுக்கழகத்தின் தலைவர் த.தயாரூபன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசசபையின் தவிசாளர் செ.சண்முகராஜாவும் சிறப்பு அதிதிகளாக வைத்தியகலாநிதி கே.முரளிதரன், நாவற்காடு நாமகள் வித்தியாலய அதிபர் த.கோபாலபிள்ளை, மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசசபையின் உறுப்பினர்களான .மோகன்,ச.முத்துலிங்கம்,நாகலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த சுற்றுப்போட்டியில் இரண்டாம் இடத்தினை மகிழடித்தீவு மகிழை இளைஞர் விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டதுடன் மூன்றாம் இடத்தினை கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகமும் நான்காம் இடத்தினை நாவற்காடு பாரத் விளையாட்டுக்கழகமும் பெற்றுக்கொண்டது.

தொடரின் சிறந்த வீரராக முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழகத்தினை சேர்ந்த எஸ்.மதுசாந்த் தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த கோல் காப்பாளராக மகிழடித்தீவு மகிழை இளைஞர் விளையாட்டுக்கழக கோல்காப்பாளர் வி.பவிதன் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த நிகழ்வின்போது விளாவட்டவான் ராஜா விளையாட்டுக்க வளர்ச்சிக்கு சேவையாற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் வெற்றிபெற்ற கழகங்கள் வீரர்களுக்கு பணப்பரிசுகளும் வெற்றிக்கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த சுற்றுப்போட்டிக்கான இணைய ஊடக அனுசரணையினை மட்டு நியுஸ் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.