“சிறிசபாரத்தினம் கிண்ணம்” - கைப்பற்றியது கூழாவடி டிஸ்கோ

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினம் உட்பட முன்னாள் போராளிகளின் 32வது ஆண்டு நினைவினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் நடாத்திய “சிறிசபாரத்தினம் கிண்ணம்” மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு கூழாவடி டிஸ்கோ விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சீலாமுனை யங்கஸ்டார் விளையாட்டுக்கழக மைதானத்தில் சனிக்கிழமை காலை ஆரம்பமான இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட ஏ மற்றும் பி பிரிவுகளை சேர்ந்த 30 உதைபந்தாட்ட கழகங்கள் இந்த சுற்றுப்போட்டியில் பங்குபற்றியிருந்தது.

இறுதிப்போட்டிக்கு கல்லடி ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழகமும் மட்டக்களப்பு கூழாவடி டிஸ்கோ விளையாட்டுக்கழகமும் தெரிவுசெய்யப்பட்டிருந்தது.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் டிஸ்கோ விளையாட்டுக்கழகம் ஒரு கோலிணைப்பெற்று 1-0 என்ன கோல்கணக்கில் கல்லடி ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழகத்தினை வெற்றிகொண்டு இந்த ஆண்டுக்கான சம்பினாக தெரிவுசெய்யப்பட்டது.

இறுதிப்போட்டி நிகழ்வானது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் உட்பட மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள்,பிரதேசபைகளின் தவிசாளர்கள்,பிரதேசசபை உறுப்பினர்கள், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த சுற்றுப்போட்டியின் சிறந்த வீரராக கல்லடி ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழக வீரர் கிஷாந்த் தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த கோல் காப்பாளராக டிஸ்கோ விளையாட்டுக்கழக கோல் காப்பாளர் ரூபராஜ் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த சுற்றுப்போட்டியில் 30 கழகங்கள் பங்குகொண்ட நிலையில் நான்காவது இடத்தினை மாமாங்கம் ரட்னம் விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டதுடன் இக்னேசியஸ் விளையாட்டுக்கழகம் மூன்றாவது இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

வெற்றிபெற்ற கழகங்களுக்கு பணப்பரிசுகளும் வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டதுடன் விளையாட்டு வீரர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.