மட்டக்களப்பில் ஜனாதிபதியின் வருகையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல்போனவர்களின் உறவினர்கள்

மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேதின கொண்டாடத்தினை எதிர்த்து காணாமல்போனவர்கள் சங்கத்தினால் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் வீட்டு தொழிலாளர்களை உங்கள் சிறைகளில் அடைத்துவிட்டு எங்கள் வீட்டு முற்றத்தில் உங்களுக்கு தொழிலாளர் தின கொண்டாட்டமா என்னும் வாசகத்துடன் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடகிழக்கில் காணாமல்ஆக்கப்பட்ட தமக்கான உழைப்பினை வழங்குவோரை இதுவரையில் கண்டுபிடித்து தராமல் தமது பகுதியில் வந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இவ்வாறான நிகழ்வினை செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது என இங்கு கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

தமக்கான நீதியை இதுவரையில் வழங்காத நிலையில் தமது பகுதிகளில் வந்து இவ்வாறான கொண்டாட்டங்களை செய்வதை வன்மையாக கண்டிப்பதாக வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட குடுமங்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

தமது பிள்ளைகள் காணமல்ஆக்கப்பட்டதில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் பங்கு இருப்பதாகவும் தெரிவித்த அவர்கள் தமது தொழிலுக்கு சென்ற பிள்ளைகளை கடத்தி காணாமல் ஆக்கிவிட்டு இங்கு வந்து தொழிலாளர் தினத்தினை செய்வதாகவும் தெரிவித்தனர்.