வீதிக்கு வந்த மாணவர்கள் -மாற்றம் ஏற்படுமா மட்டக்களப்பில்?

சர்வதேச சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் உள்ள பாடசாலை மாணவர்கள் இணைந்து கவன ஈர்ப்பு பேரணியும் சிரமதான நடவடிக்கையினையும் இன்று காலை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சுற்றாடல் அதிகாரசபையும் மட்டக்களப்பு கல்வி வலயமும் இணைந்து இந்த நிகழ்வினை முன்னெடுத்தது.

இதன்கீழ் மட்டக்களப்பு நகரில் உள்ள ஆறு பாடசாலை மாணவர்கள் மட்டக்களப்பு வெள்ளைப்பாலம் பகுதியில் மட்டக்களப்பு வாவிக்கரையினை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து சுற்றுச்சூழலில் பாதுகாப்பின் அவசியத்தினை வலியுறுத்தும் வகையில் மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் கவன ஈர்ப்பு போராட்டத்தினை ஆரம்பத்து நகர் ஊடாக புனித சிசிலியா பெண்கள் உயர் தேசிய பாடசாலை வரையில் ஊர்வலம் நடைபெற்றது.

இதன்போது சூழலை பாதுகாக்கும் வகையிலான விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் ஏந்தியிருந்ததுடன் சூழலை தூய்மையாக வைத்திருப்போம் என்ற கோசங்களையும் எழுப்பினர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சுற்றாடல் அதிகாரசபை உத்தியோகத்தர்கள்,ஆசிரியர்கள்,அதிபர்கள்,கல்வித்திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.