நீர்பாசன அசமந்த போக்கினை கண்டித்து மட்டக்களப்பில் விவசாயிகள் கவன ஈர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு நீர்பாசன திணைக்களத்தின் அசமந்த போக்கினால் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்களின் செயற்பாடுகள் விவசாயிகளுக்கு அதிர்ப்தியை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்து இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இன்று காலை மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான விவசாயிகள் அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

உன்னிச்சை நீர்பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் விவசாய குடும்பங்களும் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் பங்குகொண்டன.

இதன்போது நீர்பாசன திணைக்களத்திற்கு எதிரான பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்ததுடன் தமக்கான நிவாரணங்களை உரியவர்கள் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தனர்.

வாவிக்கரை வீதியில் ஆரம்பமான இந்த கவன ஈர்ப்பு பேரணியானது அந்தோனியார் ஆலய வீதியூடாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்றதுடன் அங்கு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக உன்னிச்சைகுளம் திறக்கப்பட்டதன் காரணமாக உன்னிச்சை நீர்பாசனகுளத்தினை அண்டிய சுமார் 6000ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன.

உன்னிச்சை குளத்தினை சிறந்த முறையில் நீர்பாசன திணைக்களம் முகாமைத்துவம் செய்யாத ள காரணத்தினாலேயே விவசாயிகளுக்கு இந்த நஷ்டம் ஏற்பட்டதாக இங்கு விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.

தமது நிலங்கள் விவசாய நிலங்கள் தற்போது மயானங்கள்போல் காட்சியளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இந்த நிலமை நீர்பாசன திணைக்களத்தினால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒரு நாள் இரவில் மட்டும் 15அடி நீர் திறக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக விவசாயிகளும் மக்களும் பாதிக்கப்பட்டதாகவும் இவ்வாறு எழுந்தமானமாக நீர்பாசன திணைக்களம் செயற்படுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

உன்னிச்சைகுளத்தில் நீர்மட்டம் அதிகரித்துவந்த நிலையில் பல தடவைகள் நீர்பான திணைக்களத்திடம் எடுத்துக்கூறியும் அவர்கள் அதனை கவனத்தில் கொள்ளாமல் திடீர் என 23ஆம் திகதி அரையடி திறப்பதாக கூறிவிட்டு 15அடி திறந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் விவசாயிகள் தாக்கியதாக போலியான குற்றச்சாட்டினை கூறி தமது பக்கத்தில் உள்ள பிழைகளை மூடிமறைப்பதற்கான நடவடிக்கையினை நீர்பாசன திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுவருவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.

கவன ஈர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.