மட்டக்களப்பில் ஊடகவியலாளர் நடேசனின் 14வது நினைவுதினமும் கண்டன ஆர்ப்பாட்டமும்

படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவுதினம் இன்று பிற்பகல் அனுஸ்டிக்கப்பட்டதுடன் யாழில் தாக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதிவேண்டி கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்,ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவுதினத்தினை குறிக்கும் வகையில் 14ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செய்யப்பட்டதுடன் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

2004ஆம்ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினர்களினால் ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

குறித்த படுகொலை தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் வழங்கப்பட்டபோதிலும் கொலையாளிகள் இனங்காட்டப்பட்டபோதிலும் இதுவரையில் எந்த வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் 14வது நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது.

இதேபோன்று நினைவேந்தல் நிகழ்வினையடுத்து யாழில் பிரதேச ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படடது.

தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தினை இதன்போது வலியுறுத்தப்பட்டது.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி,யாழில் தாக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதியைப்பெற்றுக்கொடு போன்ற சுலோகங்களை தாங்கியவாறு கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் நான்கு தினங்களுக்கு முன்னர் காலைக்கதிர் பத்திரிகையின் பிராந்திய ஊடகவியலாளர் இராஜேந்திரன் தாக்குதலுக்குள்ளானார்.இதற்கு வன்மையான கண்டனத்தினை தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இது தொடர்பில் முழுமையான விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.