தனி தமிழ் கட்சி ஆட்சி அமைக்கவேண்டும் என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு –கருணா அம்மான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் கட்சிகள் தனித்து ஆட்சியமைக்கவேண்டும் என்பதற்காக தமது கட்சி ஆதரவினை வழங்கியுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று,போரதீவுப்பற்று,பட்டிப்பளை ஆகிய பிரதேசசபையில் ஆட்சியினை அமைப்பதற்கு தமது கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவினை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேசிய கட்சிகள் தமிழ் பகுதிகளில் ஆட்சியமைப்பதினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் தெரிவித்த அவர் தமிழ் பகுதிகளில் தனி தமிழ் கட்சிகள் தனித்து ஆட்சியமைப்பதற்கு தமது கட்சி ஆதரவு வழங்கும் என தெரிவித்தார்.

போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஆட்சியினை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிகொள்வதற்கு காரணமாக முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் போரதீவுப்பற்று உறுப்பினர் விக்னேஸ்வரனின் ஆதரவே முக்கியமானதாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.