மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான ஐ.தே.க.-நாளை பாராளுமன்றத்தில் எதிரொலிக்குமா?

மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு பிரதேசசபைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினை சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் அதிருப்திகள் தோன்றியுள்ளதை காணமுடிகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்; ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாளை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவினை கோரி நிற்கின்ற வேளையில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பெரும்பான்மையாகவுள்ள பிரதேசசபைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மண்முனை தென் எருவில் பற்று மற்றும் போரதீவுப்பற்றில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டினையே ஐக்கிய தேசிய கட்சி எடுத்திருந்தது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசபையினை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி போட்டியிட்ட அதேவேளை போரதீவுப்பற்றில் சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டு வெற்றிபெற்றவருக்கு ஆதரவு வழங்கி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்துள்ளது.

இந்த நிலையில் இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

நாளைய தினம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.