சுதந்திரன் பத்திரிகையானது ‘சுமந்திரன்’ பத்திரிகையாக இருக்ககூடாது –ஜனா

சுதந்திரன் பத்திரிகையானது ‘சுமந்திரன்’ பத்திரிகையாக இல்லாமல் ‘சுதந்திரன்’ பத்திரிகையாக இருந்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து முன்கொண்டுசெல்லும் பணிகளை முன்னெடுக்கவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

தமிழர்களின் குரல்களை ஒன்றிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்தும் வகையில் அனைத்து தமிழர்களையும் ஒன்றிணைக்கும் பணியை அந்த பத்திரிகை செய்யவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு டொல்பின் விளையாட்டுக்கழகத்திற்கு கடினபந்து விளையாட்டுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் 2017ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் ஒரு இலட்சம் ரூபா செலவில் கொள்வனவுசெய்யப்பட்ட உபகரணங்களே இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டன.

டொல்பின் விளையாட்டுக்கழகத்தின் செயலாளர் க.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் டொல்பின் விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் தலைவர் வரதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவந்த இன அழிப்பு போராட்டம் விடுதலைப்போராட்டமாக பரிணமித்த நிலையில் 2009 தமிழர்களின் விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அந்த இனசுத்திரிப்பு நடவடிக்கைகள் மாற்றமடைந்து அம்பாறையிலும் கண்டியிலும் சிறுபான்மையாகவுள்ள முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
முஸ்லிம் மக்களும் ஒன்றை உணர்ந்துகொள்ளவேண்டும்.தமிழ் மக்கள் துன்புறுத்தப்பட்டவேளையில் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டபோது தமிழர்களுக்கு ஆதரவாக அவர்கள் குரல்கொடுக்காவிட்டாலும் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படும்போதேல்லாம் தமிழ் மக்கள் குரல்கொடுத்துவருகின்றனர்.இன்றைக்கும் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டபோது அதற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் குரல்கொடுத்துவருகின்றார்.

இனங்களிடையே வன்முறைகளையும் விரிசல்களையும் ஏற்படுத்தும் வகையில் சமூகவலைத்தலங்கள்,வைபர்,வட்சப் போன்ற இலத்திரனியல் ஊடகங்கள் சில இருந்துள்ளதை கடந்த காலத்தில் இருந்துள்ளது.அவைமுடக்கப்பட்டு இன்று சுமுகமான நிலைக்கு வந்துகொண்டுள்ளது.

இந்த நிலையில் வடகிழக்கில் புதிய புதிய பத்திரிகைகள் உட்பட ஊடகங்கள் வந்துகொண்டிருக்கின்றன.பத்திரிகைகள் ஊடகத்தின் ஒரு பகுதியாகும்.ஊடகம் என்பது சமுதாயத்தின் குரல் என்பார்கள்.
மட்டக்களப்பில் சில வாரங்களுக்கு முன்னர் அரங்கம் என்னும் பத்திரிகைவந்தது. 1985ஆம் ஆண்டுக்கு முன்னர் நிறுத்தப்பட்டிருந்த சுதந்திரன் பத்திரிகை சில தினங்களுக்கு முன்னர் வெளிவந்தது.

இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து 1983ஆம் ஆண்டுவரைக்கும் தமிழாகளின் உரிமை,அவர்களின் பிரச்சினை தொடர்பில் வெளியுலகுக்கு கொண்டுவந்தது இந்த சுதந்திரன் பத்திரிகையாகும்.

நாங்கள் அறிந்த காலம் தொடக்கம் 1970,75க்கு பின்னர் சுதந்திரன் பத்திரிகையில் கோவை மகேசன் ஆசிரியராக இருக்கும்போது மிகவும் விறுவிறுப்பான பத்திரிகையாக இருந்தது.

இந்த நாட்டில் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்திற்கு விதையினை விதைத்தது தமிழரசுக்கட்சியாகும்.அக்காலத்தில் தமிழர்களுக்கு எதிராக அநீயாயங்கள் நடக்கும்போது அதற்கு எதிராக பல்வேறு சத்தியாக்கிரக போராட்டம் உண்ணாவிரத போராட்டங்களை நடாத்தியது தமிழரசுக்கட்சியாகும்.தமிழர்களின் உரிமைகள் பெறப்படவேண்டும் என்பதற்கான போராட்டங்களை நடாத்தி அடிவாங்கி விதையினை விதைத்தார்கள்.

எனினும் அந்த விதைக்கு நீர் ஊற்றி  வளர்த்தெடுத்தது இந்த சுதந்திரன் பத்திரிகையென்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். அந்த பத்திரிகைமூலம் வரும் செய்திகள் எங்களது இரத்தங்களை சூடாக்கும்,நரம்புகளை முறுக்கும்.அந்தவிதமாக தமிழர்கள் பாதிக்கப்படும்போது தமிழர்களின் பத்திரிகையாக இருந்துவந்தது.
விதைவிதைத்தது தமிழரசுக்கட்சியாக இருந்தாலும் நீருற்றி வளர்த்தது அந்த சுதந்திரன் பத்திரிகை.அந்த விடுதலைப்போராட்டத்தினை விருட்சமாக மாற்றியது தமிழ் தேசிய விடுதலைக்காக போராடிய விடுதலை இயக்கங்கள்தான் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

இலத்திரனியல் ஊடாகங்கள் வருகை பத்திரிகை வாசிப்பினை இல்லாமல் செய்திருக்கின்றது.வரும் சமூதாயம் பத்திரிகைகள் வாசிக்கவேண்டும்.வெளிவரும் பத்திரிகைகள் பத்திரிகை சுதந்திரத்தினை கைக்கொள்ளவேண்டும்.

சில பத்திரிகைகள் தரங்கெட்ட பத்திரிகைகளாகவும் சில பத்தி எழுத்தாளர்கள் தரம்கெட்டவர்களாகவும் மாற்றமடைந்துவருகின்றனர்.ஒரு அரசியல் கட்சி ஒருவருக்கு பாதிப்பினை ஏற்படுத்திவிட்டது என்பதற்காக ஏனையவர்களை குறைசொல்லி எழுதும் பத்தி எழுத்தாளர்கள் கூட மலிந்துவிட்ட நிலையினை காணமுடிகின்றது. 

சுதந்திரன் பத்திரிகையானது ஓரு காலத்தில் விடுதலை இயக்கங்கள் உருவாவதற்கும் விடுதலை இயக்கங்களுக்கு இளைஞர்கள் செல்வதற்கு தூண்டுகோலாக இருந்தது.இன்று மீளவந்துள்ள புதிய சுதந்திரன் பத்திரிகைக்கு இன்று ஒரு கடமையுள்ளது.

தமிழ் மக்களையும் தமிழ் மக்களுக்காக போராடிய இயக்கங்களையும் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தினை அடைவதற்கு பணியாற்றவேண்டும்.தமிழர்களின் ஒருமித்;த குரலாக இருக்குவேண்டும் என்பதக்காவே அது உருவாக்கப்பட்டது. அதற்காக அனைத்து தமிழர்களையும் ஒன்றிணைக்கும் பணியை செய்யவேண்டும்.

வடமாகாணத்தினை பொறுத்தவரையில் அங்கு எந்த கட்சி வந்தாலும் தமிழர்களே ஆட்சியமைக்கும் நிலையேற்படும்.கிழக்கு மாகாணத்தில் அந்த நிலையில்லை.கிழக்கு மாகாண தமிழர்கள் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுள்ளனர்.

2011ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் 39.7வீதமாக இருந்த தமிழர்களின் வீதம் இன்று 35வீதத்திற்கும் குறைவாக மாறியுள்ளவேளையில் தமிழர்கள் ஒன்றாக இருக்கவேண்டும்.கடந்த காலத்தில் பல தரப்பினராலும் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அந்த நிலைமை மீண்டும் ஏற்படாமல் தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைக்ககூடிய ஒரு புதிய சுதந்திரனாக சுதந்திரன் பத்திரிகை இருக்கவேண்டும்.

அது ஒரு கட்சி சார்ந்த பத்திரிகையாக இருக்ககூடாது.அது சுமந்திரன் பத்திரிகையாக இருக்காமல் சுதந்திரன் பத்திரிகையாக இருக்குமானால் நாங்கள் அனைவரும் அதனை வரவேற்போம்.தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாக இருக்கவேண்டும்.

எமது இனம் எதிர்கொண்ட அழிவுக்கான தீர்வு கிடைக்கும் வரையிலாவது நாங்கள் அனைவரும் தமிழ் தேசியத்துடன் இருக்கவேண்டும்.தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெறும்போதே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வினைப்பெறுவதற்கு நாங்கள் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்றார்.