மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் விடைபெற்றார் –கண்ணீருடன் விடைகொடுத்த பாடசாலை சமூகம்

இலங்கையின் முதலாவது ஆங்கிலப்பாடசாலை என்ற பெருமையினைக்கொண்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபராக இருந்து ஓய்வுபெற்றுச்செல்லும் அதிபர் ஜே.ஆர்.பி.விமல்ராஜ் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை பாடசாலையில் நடைபெற்றது.

பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் இணைந்து ஏற்பாடுசெய்த இந்த நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஆர்.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

1958ஆம் ஆண்டு பிறந்த இவர் ஆரம்ப கல்வியை புனித சிசிலியா பெண்கள் மகா வித்தியாலயத்திலும் உயர்கல்வியை புனித மைக்கேல் கல்லூரியிலும் கற்றார்.

தனது முதல் ஆசிரிய நியமனத்தினை 1977ஆம்ஆண்டு பெற்ற இவர் ஆசிரியராகவும் அதிபராகவும் மட்டக்களப்பு,கொழும்பு ஆகிய பாடசாலைகளில் 41 வருடங்களாக கல்விச்சேவையாற்றியுள்ளார்.

2014ஆம்ஆண்டு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபராக நியமனம்பெற்ற அவர் பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கும் பாடசாலையின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றினார்.

அவரை கௌரவிக்கும் வகையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் ஓய்வுபெற்றுச்செல்லும் அதிபர் ஜே.ஆர்.பி.விமல்ராஜ் அவர்களுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரின் உரைகள் நடைபெற்றது.

உரைகளை தொடர்ந்து மாணவர்கள்,ஆசிரியர்கள் ஓய்வுபெற்றுச்செல்லும் அதிபரை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் இன்று 60வது பிறந்த நாளைக்கொண்டாடும் அதிபர் ஜே.ஆர்.பி.விமல்ராஜ் அவர்கள் பிறந்த நாளை கொண்டாடும் நிகழ்வினையும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஏற்பாடுசெய்திருந்தனர்.

இந்த நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் வை.கோபிநாத் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.