கிழக்கு மாகாண தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

கிழக்கு மாகாண தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

இன்றைய காலத்தில் தொழில்நுட்ப ரீதியான வாழ்க்கைமுறையினை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில் கிழக்கு மாகாணத்தின் எதிர்காலத்தினையும் தகவல் தொழில்நுட்பத்தினை நோக்கியதான முன்நகர்வினை மேற்கொள்ளும் வகையில் இந்த கிழக்கு மாகாண தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப துறையில் மாணவர்களை ஈடுபடுத்தவும் தொழில்நுட்ப துறையில் கற்கும் மாணவர்களுக்கு தொழில்வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கவும் தொழில்நுட்ப துறையில் உள்ள தொழில் ஸ்தாபனங்களை ஒருங்கிணைக்கவும் அவர்களுக்கான தேவைகளை பூர்த்திசெய்யும் வகையிலான நடவடிக்களை இந்த சம்மேளம் மேற்கொள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பு,கல்லடியில் உள்ள சன்சயின்ட் கிராண்ட கல்லடி ஹோட்டலில் கிழக்கு மாகாண தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அன்வர் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது.

இந்தநிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் என்.குணநாதன் கலந்துகொண்டார்.

இதன்போது கிழக்கு மாகாண தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டதுடன் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கல்வியை பூர்த்திசெய்த 07 இளைஞர் யுவதிகளுக்கு கல்முனை சகானா நிறுவத்தினால் தொழிலுக்கான நியமனங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இலங்கையில் வருடாந்த ஐந்து இலட்சம் இளைஞர் யுவதிகள் தொழில்வாய்ப்பினை எதிர்பார்ப்பதாகவும் அனைவருக்கும் அரசாங்கம் தொழில்வாய்ப்பினை வழங்கமுடியாத நிலையில் அவர்களை இவ்வாறான தகவல் தொழில்நுட்ப துறையில் உட்புகுத்துவத்துவதன் ஊடாக தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்ளமுடியும் என இங்கு வலியுறுத்தப்பட்டது.