மதுவரித்திணைக்களத்தின் அதிரடி - உல்லாசவிடுதியில் இருந்து பெருமளவான சட்ட விரோத மதுபானங்கள் மீட்பு

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகம்பை பகுதியில் வெளிநாட்டவர் நடாத்திவந்த ஹோட்டலில் இருந்து சட்ட விரோதமான முறையில் வைக்கப்பட்டிருந்த பெருமளவான வெளிநாட்டு,உள்நாட்டு மதுபான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று புதன்கிழமை மாலை மதுவரித்திணைக்களத்தினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது இந்த மதுபான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரன் தலைமையில் சென்ற மதுவரித்திணைக்களத்தினர் இந்த முற்றுகையினை மேற்கொண்டனர்.

இதன்போது ஆயிரக்கணக்கான பியர் ரின்களும் கேப் பியர் மற்றும் 200க்கும் அதிகமான வைன் போத்தல்களும் மீட்கப்பட்டதாக அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட மதுபான பொருட்கள் எந்தவிதமான அனுமதியும் பெறப்படாமல் சட்ட விரோதமான முறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட மதுபான பொருட்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியானது எனவும் இது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவருக்கு எதிராக எதிர்வரும் 24ஆம் திகதி அம்பாறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார்.