இலங்கையில் டெங்கு தாக்கம் அதிகமாகவுள்ள பிரதேசமாக மட்டக்களப்பு மாவட்டம் இனங்காணப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு 1260 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் சனத்தொகையின் அடிப்படையில் டெங்கு நோயாளர்கள் அதிகமுள்ள முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசத்தில் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு பிரச்சினைகள் காரணப்படுகின்றன.டெங்கு அதிகளவில் காணப்படுகின்றன.அதனை தவிர அம்மை நோய் மற்றும் தொழுநோய் என்பன அண்மைக்காலமாக அதிகரித்துச்செல்லும் நிலையுள்ளது.நோய்களை அடையாளம் காண்போரின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்லும் நிலை காணப்படுகின்றது.அவற்றிக்கான தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

டெங்கு தொடர்பில் இலங்கை முழுவதிலும் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.முதலாவது இடத்தினை கொழும்பும் இரண்டாவது இடத்தினை மட்டக்களப்பும் கொண்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் இந்த ஆண்டில் நேற்றுவரையில் 1985பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டில் நேற்றுவரையில் 1260பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.சனத்தொகை ரீதியாக பார்க்கும்போது டெங்கினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவானோரைக்கொண்ட இலங்கையில் முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் மண்முனை வடக்கு பிரதேசத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.248பேர் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.ஏறாவூர்,ஆரையம்பதி பகுதிகளிலும் அதிகளவானோர் இனங்காணப்பட்டாலும் பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவானோர் மண்முனை வடக்கிலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.
டெங்கினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு மூன்று மரணங்கள் ஏற்பட்டுள்ளபோதிலும் மண்முனை வடக்கு பிரதேசத்தில் எந்த மரணச்சம்பவங்களும் இடம்பெறவில்லை.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கல்லடி திருச்செந்தூர்,கல்லடி வேலூர்,நொச்சிமுனை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகள் இனங்காணப்பட்டு அப்பகுதியியில் நுளம்பு பெருக்கமான பகுதிகளில் அழிக்கப்பட்டன.அப்பகுதியில் புகையிடும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகளில் மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து பெரியளவிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.இந்த ஆண்டு இதுவரையில் ஆறு விழி;ப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் ஒரு பெரிய பகுதியில் டெங்கு நோயாளர் இனங்காணப்படும்போது அப்பகுதியில் டெங்கு நோய் பரவும் வீதம் தடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாநகரசபை ,பிராந்திய சுகாதார அதிகாரி அலுவலகங்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு முன்னெடுக்கப்படும் இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்ககைளுக்கு பொலிஸாரின் ஆதரவு குறைவான வகையிலேயே கிடைக்கின்றது.டெங்கு ஒழிப்பு தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையில் நடாத்தப்பட்ட மூன்று கூட்டங்களுக்கு காத்தான்குடி பொலிஸார் வருகைதந்தபோதிலும் மட்டக்களப்பு பொலிஸார் வருகைதரவில்லை.

இதேபோன்று மட்டக்களப்பு கல்வி திணைக்களத்தின் பங்களிப்பும் குறைவான வகையிலேயே கிடைக்கின்றது.டெங்கு தடுப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலணியினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்று நிரூபம் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.பாடசாலைகளில் டெங்கு தடுப்பு குழுக்கள் அமைக்கப்படவேண்டும்,அது தொடர்பான அறிக்கை மாதாந்தம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு அனுப்பிவைக்கப்படவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தும் 40 பாடசாலைகளில் 10 பாடசாலைகளும் மத்திய கல்வி வலயத்தில் உள்ள நான்கு பாடசாலைகளில் ஒரு பாடசாலையுமே ஜனவரி மாதத்தில் அறிக்கையினை அனுப்பியிருந்தது.பெப்ரவரி மாதத்தில் 06பாடசாலைகள் மட்டுமே அனுப்பியிருந்தது.

அதேபோன்று அரச திணைக்களங்கள் அனைத்துக்கும் சுற்று நிருபம் அனுப்பியிருந்தோம்.240அரச,தனியார் நிறுவனங்களுக்கு ஒரு வாரத்தில் ஒருநாள் சுற்று சூழலை பரிசோதனை செய்து டெங்கு ஒழிப:பு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் அதன் அறிக்கையினை அனுப்புமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தபோதிலும் 24 நிறுவனங்களே அதனை அனுப்பியிருந்தது.

பாடசாலைகளில் டெங்கு பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் கட்டாயம் மேற்கொள்ளவேண்டும்.அது தொடர்பான அறிவுறுத்தல்கள் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்படவேண்டும்.
கடந்த ஆண்டு தொழுநோயாளர்கள் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 38பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன் இந்த ஆண்டு 14பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.