மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் செயற்படுவோர் அனைவரும் இணையவேண்டும் -கிழக்கு மாகாண பணிப்பாளர் அன்சார்

மாற்றுத்திறனாளிகளை பலப்படுத்தவேண்டுமானால் அது தொடர்பாக செயற்படுவோர் அனைவரும் இணைந்து செயற்படவேண்டும் என கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்தும் செயற்றிட்டங்களை கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றது.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயம் விசேட அபிவிருத்திக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் சா.அருள்மொழி,கிழக்கு மாகாண தலைமையக சமூகசேவைகள் உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டினை கருத்தில்கொண்டு செயற்படும் அரசார்பற்ற நிறுவனங்களான பி.பி.சி.சி,கமீட், வை.எம்.சி.ஏ., நவஜீவன,வேல்;ட்விசன் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பு,மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகள்,மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் இல்லங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூகசேவைகள் உத்தியோகத்தர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளின் தொழில்வாய்ப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்திசெய்தல் அவர்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்த்துவைத்தல் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மாற்றுத்திறனாளிகளை வளப்படுத்தவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் தங்கியுள்ளது.நான் மாற்றுத்திறனாளிகளாக மாற்றப்பட்டவர்களுடன் இணைந்து பணியாற்றுவதை மிகவும் விரும்புகின்றேன்.அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் செயற்படும் அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஏனைய அமைப்புகள் இணைந்துசெயற்படவேண்டும்.அவ்வாறு செயற்பட்டால் மாற்றுத்திறனாளிகளுக்கு அது வெற்றியாக அமையும்.

எதிர்வரும் காலத்தில் அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச பரா ஒலிம்பிக்போட்டியில் கலந்துகொள்வதற்கு இலங்கையில் இருந்து ஏழு மாற்றுத்திறனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.அந்த ஏழு பேரில் மட்டக்களப்பு வாகரையினை சேர்ந்த யுவதி ஒருவரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.இது நாங்கள் அனைவரும் இணைந்து செயற்பட்டதன் விளைவாக கிடைத்த வெற்றிஎன்றார்.