மக்களின் குடியிருப்பு காணிக்கு 35வருடங்களுக்கு பின்னர் உரிமை கோரும் பெண்கள் -சட்ட நடவடிக்கைக்கு ஜனா நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் தர்மபுரத்தில் தனிநபர்கள் இருவரினால் 22குடும்பங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள காணி தொடர்பான வழக்கினை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையினை முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)மேற்கொண்டுள்ளார்.

கிரான்குளம் தர்மபுரத்தில் கடந்த 35 வருடமாக வசித்துவரும் 22குடும்பத்தினர் வசிக்கும் காணியானது தமக்கு சொந்தமென யாழ் மற்றும் மொரட்டுவை பகுதிகளில் இருந்து இரண்டு பெண்களினால் உரிமை கோரப்பட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த பகுதி மக்கள் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் கவனத்திற்கு கொண்டுசென்றதை தொடர்ந்து அதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் இன்று சனிக்கிழமை காலை அப்பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சிரேஸ்ட சட்டத்தரணி கே.சிவநாதனும் இணைந்திருந்தார்.சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஏற்பாடுகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

1980 காலப்பகுதிகளுக்கு பின்னர் இப்பகுதியில் மக்கள் குடியமர்த்தப்பட்டு வசித்துவருவதுடன் இப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் குடியேற்றப்பட்டு சுமார் 35வருடத்திற்கு மேலாக வசித்துவருகின்றனர்.

இவர்களில் 22குடும்பங்களுக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டலாம் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

மிகவும் பின்தங்கிய பகுதியாக கருதப்படும் இப்பகுதியில் வறிய மக்களே அதிகளவில் வசித்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.