காத்தான்குடி பொலிஸார் பக்கச்சார்பாக செயற்படுகின்றனர் –நல்லாட்சிக்கான தேசிய முன்னணி குற்றச்சாட்டு

தேர்தல் சட்ட விதிகள் மீறப்படுவது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிடும்போது அதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டிய பொலிஸார் அந்த முறைப்பாடு யாருக்கு எதிராக செய்யப்படுகின்றதோ அவர்களுக்கு தகவல்களை வழங்கிவிட்டு அவர்களை தப்பிக்கச்செய்கின்ற நிலையிருப்பதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி குற்றஞ்சுமத்தியுள்ளது.

தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவிக்கும்போதே முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில்லையென நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர்ரஹ்மான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு காத்தான்குடியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் விசேட செய்தியாளர் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

நேற்று இரவு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வேட்பாளரின் வீட்டின் மீது குண்டுத்தாக்குதல் நடைபெற்றதை தொடர்ந்து இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து கருத்துதெரிவித்த தலைவர்,

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் காத்தான்குடி பகுதியில் சிறியளவில் இடம்பெற்றுவந்த தேர்தல் வன்முறைகள் உயிரிப்புகளை ஏற்படுத்தும் வகையில் மாறியுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரவு எமது வேட்பாளர் பர்ஷாத்தின் வீட்டின் மீது குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.திட்டமிடப்பட்ட வகையில் குறித்த வேட்பாளரை இலக்குவைத்து இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இது ஒரு கொலைமுயற்சியாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இவ்வாறான வன்முறைகளை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன் இவ்வாறான சம்பவங்களை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.இவ்வாறான சம்பவங்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.

சில கட்சிகளின் பிரசாரங்களின்போது வன்முறைகளையும் வெறுப்புணர்வுகளையும் தூண்டும் வகையிலான பிரச்சாரங்களை காணமுடிகின்றது.நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை இலக்குவைத்து இளைஞர்களை உசுப்பேத்துகின்ற வன்முறைகளை தூண்டும் வகையிலான பேச்சுகளை இங்குள்ள சிரேஸ்ட அரசியல்வாதிகள் பேசிவருகின்றனர்.இந்த பின்னணியிலேயே எமது வேட்பாளர் வீடு மீதான தாக்குதலையும் நாங்கள் பார்க்கின்றோம்.

சில தினங்களுக்கு முன்னரும் ஏனைய கட்சி உறுப்பினர் ஒருவரின் காரியாலயமும் எரியுட்டப்பட்டுள்ளது.அதுபோன்ற சில சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

வன்முறைகளை தூண்டுகின்ற தேர்தல் பிரசாரங்கள் தொடர்பிலும் நடவடிக்கையெடுக்கப்படவேண்டும் என்பது எமது கோரிக்கையாகும்.இந்த விடயங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாருக்கு பாரிய பங்கு இருக்கின்றது.

துரதிர்ஸ்டவசமாக காத்தான்குடி பொலிஸாரின் நடவடிக்கை அசமந்த நிலையில் இருப்பதை நாங்கள் காணமுடிகின்றது.தேர்தல் காலங்களில் வன்முறைகள் நடைபெறலாம் என்று எதிர்பார்ப்பது பொலிஸாரின் கடமை.அதற்கேற்றவாறு நிலவரங்களை தயார்செய்யவேண்டும்.தேர்தல் சட்ட மீறல்கள் நடைபெற்றபோது நாங்கள் ஏராளமான முறைப்பாடுகளை தெரிவித்திருந்தோம் எந்த முறைப்பாட்டுக்கும் உரிய நடவடிக்கை அவர்கள் எடுத்ததாக தெரியவில்லை.

ஒரு சில நடவடிக்கைகளை எடுத்தாலும் பாரதூரமான தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் தெரிவிக்கப்படும்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

தேர்தல் சட்ட விதிகள் மீறப்படுவது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிடும்போது அதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டிய பொலிஸார் அந்த முறைப்பாடு யாருக்கு எதிராக செய்யப்படுகின்றதோ அவர்களுக்கு தகவல்களை வழங்கிவிட்டு அவர்களை தப்பிக்கச்செய்கின்ற நிலையிருப்பதாகவே எங்களுக்கு தெரிகின்றது.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர்,தேர்தல் ஆணையாளர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளேன்.ஆனால் இதுவரையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

குற்றம் நடக்கப்போகின்றது என்றால் அங்கு விரைந்து பொலிஸார் அந்த குற்றத்தினை தடுக்கவேண்டும்.அதனைவிடுத்து சாகஸமாக வந்து அந்த குற்றச்செயல் நடைபெற்ற பின்னர் வந்து அறிக்கையிடுவது அவர்களின் பணி அல்ல.அந்தவகையில் காத்தான்குடி பொலிஸார் அசமந்த போக்கு தொடர்பில் எங்களது வன்மையான கண்டனத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய பல செயற்பாடுகளை காத்தான்குடியில் பல பகுதிகளிலும் காணமுடியும்.அதில் இருந்து எந்த தரப்பு அதிகளவான தேர்தல் சட்டத்தினை மீறும் செயற்பாட்டினை செய்கின்றது என்பதை தெளிவாக காணமுடியும்.

இவ்வாறான நிலையில் இவற்றினை கட்டுப்படுத்த பொலிஸார் முறையான நடவடிக்கையினை எடுக்கவில்லையென்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகவே நாங்கள் பார்க்கின்றோம் என்றார்.