பிள்ளையினை சுமப்பவரே பிள்ளையினை பெறமுடியும் -வியாழேந்திரன் எம்.பி.

யார் எதனைக்கூறினாலும் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
பிள்ளையினை சுமக்கும் தாயே பிள்ளையினை பெற்றுக்கொடுக்கமுடியும். தீர்வுத்திட்டம் தொடர்பில் நடவடிக்கையெடுத்துவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மட்டுமே தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வினைப்பெற்றுக்கொடுக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் நாவலடி தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையான வட்டாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையிலான பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

கல்லடி,உப்போடையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபைக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் உரையாற்றினர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்,

சிலர் சில அபிவிருத்திகளை செய்துவிட்டுஅதனை மட்டும் வைத்து சிலர் தமிழ் மக்கள் மத்தியில் வாக்கு கேட்டுவருகின்றனர். நாங்கள் அபிவிருத்தியைபற்றி பேசுவதில்லை.நாங்கள் அபிவிருத்தியை நாங்கள் அனுபவிக்கவேண்டுமானால் எமது நிலம் சார்ந்த இருப்பு பாதுகாக்கப்படவேண்டும். 

இன்று அனைத்து கட்சிகளும் ஒரு பக்கம் நின்று ஒட்டுமொத்த விசமத்தனமான விமர்சனங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதுசொரியும் நிலையிருந்துவருகின்றது.

யார் என்ன சொன்னாலும் பிள்ளையை சுமந்தவள்தான் பிள்ளையை பெறவேண்டும்.தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றினைப்பெற்றுக்கொள்ளும் வகையில் நாங்கள் செல்லும்போது மிகவும் இராஜதந்திரமாக மிகவும் கவனமாக எந்த குழப்பத்தினையும் நாங்கள் ஏற்படுத்தாது இந்த இணைப்பு அரசாங்கத்தில் மக்களுக்கு தீர்வினைப்பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற ரீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பயணிக்கின்றுத.

யார் என்ன கூறினாலும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களுக்கான தீர்வினைப்பெற்றுக்கொடுக்கமுடியும்.இதனை தமிழ் மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர்.தமிழ் தேசிய கூட்டமைப்பினை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஆதரித்துவருகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பல அபிவிருத்திகளையும் செய்துவருகின்றது.கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 2000வீடுகளை 2016,2017 காலப்பகுதியில் தேசிய வீடைப்பு அதிகாரசபை ஊடாக கொண்டுவந்தோம்,சுமார் 5800மி;ல்லியன் ரூபா பெறுமதியான பாலங்கள் அமைப்பதற்கான முன்மொழிவுகளை வழங்கி கிரான்,பன்குடாவெளி,குருமண்வெளி,சந்திவெளி பாலம் ஆகியனவற்றை அமைப்பதற்கான முன்மொழிவுகளை வழங்கி அமைச்சின் அங்கீகாரத்தினைப்பெற்றோம்.எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதிகளிலும் பல்வேறு  வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம்.

இன்று சூரியன் கட்சியினர் இரண்டு கோடி ரூபா ஊழலைப்பற்றி கதைக்கின்றனர். அண்ணன் சிவசக்தி ஆனந்தன் நான் மிகவும் மதிக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.அவர் எந்த நோக்கத்திற்காக அவ்வாறு பேசுகின்றார் என்று தெரியவில்லை.நாங்கள் திட்டமுன்மொழிவுகளை மட்டுமே அந்த பணத்திற்கு வழங்கலாம்.அந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் அவர் இருப்பது கவலைக்குரியது.

கடந்த மூன்று தசாப்தகாலமாக இந்த நாட்டில் நடைபெற்ற ஈழ விடுதலைப்போராட்டமானது வெறும் கிறவல் வீதிக்காகவோ,வெறும் கொங்கிறிட் வீதிக்காகவோ நடக்கவில்லை.வடகிழக்கில் உள்ள தமிழர்களின் தாயகபூமியில் நிலம் நிலம்சார்ந்த இருப்பு பாதுகாக்கப்படும்போதே தமிழர்களின் மொழி,கலைகலாசாரம்,பண்பாடு பாதுகாக்கப்படும் என்பதற்காகவே ஈழவிடுதலைப்போராட்டம் நடைபெற்றது.

ஆயுதப்போராட்டம் மௌனிகப்பட்டால் அந்த இடத்தில் இருந்து அரசியல் ரீதியான போராட்டம் ஆரம்பிக்கவேண்டும் என்பதற்காகவே 2001ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தலைவரினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியான போராட்டத்தினை கச்சிதமாக மேற்கொண்டுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை உட்பட பல காணி அபகரிப்புகளுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே போராடியது.தமிழ் மக்களின் வாழ்வாதார நிலங்களில் படைமுகாம்கள் இருந்தபோது அதனை அகற்றுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே குரல் எழுப்பியது.

கடந்த காலங்களில் வெருகல் இருந்து துறைநீலாவணை வரையில் தமிழ் மக்களு;குரிய பல்லாயிரணக்கான ஏக்கர் காணிகளை தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் மாற்று சமூகத்திற்கு விற்றவர்கள் காட்டிக்கொடுத்தவர்கள் இன்று எமது சமூகத்திற்கு முன்பாக வந்து காணிகளை பாதுகாக்கப்போவதாக கூறுகின்றனர்.