கிழக்கு மாகாணத்தில் மேலும் ஓரு தொகுதி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

(கிருஸ்ணா)
கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் மேலும் ஒரு தொகுதியினர் ஆசிரியர் சேவைகளுக்குள் உள்வாங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 385பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 03ஆம் திகதி வழங்கப்படவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறும் நிகழ்வில் இந்த ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம தெரிவித்தார்.

இது தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்ட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,முதலமைச்சின் செயலாளர்,கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது குறித்த நியமனங்கள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் மார்ச் மாதம் 03ஆம் திகதி காலை 10.00மணியளவில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதுடன் அன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் உள்ள 322 பாடசாலைகளுக்கு விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான உபகரணங்களும் வழங்கப்படவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.