கோடிக்கணக்கான பணத்தினை செலவிட்டு வாக்குகளை பிரிக்க முயற்சி –ஜனா

வடக்கு கிழக்கில் தேசிய கட்சிகள் தங்களுடைய முகவர்கள் மூலமாக ஒவ்வொரு வட்டாரத்திலும் கோடிக்கணக்கான பணத்தினை செலவிட்டு தமிழ் மக்களுடைய வாக்குகளை பிரிப்பதற்கு முனைவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடியில் இன்று காலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

உள்ளுராட்சி மன்ற தேர்தலானது அரசியல் பேசும் களமல்ல,அபிவிருத்தி சம்பந்தமான பேசும் களமென்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தவிர்ந்த ஏனைய கட்சிகளும் சில சுயேட்சைக் குழுக்களும் கூறுகின்றன.

அரசியற்கட்சிகளுடாக,சுயேட்சையாக அரசியலில் இறங்கும் இவர்கள் அரசியல் தெரியாமல், தமிழ் மக்களின் இன்றைய நிலையைக்கூட தெரியாமல் உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் வெகுமதி தெரியாமல உள்ளுராட்சி மன்ற தேர்தலானது அரசியல் பேசும் களமல்ல என்று கூறுகின்றனர்.

எமது மக்களின் இனப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வை காண்பதற்கு மக்களிடம் நாம் பெறுகின்ற ஆணையாக இந்த தேர்தலை நாங்கள் பார்க்கின்றோம். இந்த நாடு சுதந்திரமடைந்த காலம் தொடங்கி இன்றுவரை இந்த நாட்டில் தமிழர்கள் நிம்மதியாக வாழ்ந்ததில்லை. 1956ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் என்ற மொழி உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதிலிருந்து தமிழ் மக்கள் அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் இன்றுவரை போராடிவருகின்றோம்.

வெள்ளையர்களிடமிருந்து இந்த நாடு சுதந்திரமடைவதற்கு இந்த நாட்டின் மூத்த குடிகளான தமிழர்கள் முக்கியமானவர்களாக செயற்பட்டார்கள். சுதந்திரமடைந்த பின்பு இந்த நாட்டின் பெரும்பான்மையினம் சிறுபான்மையினமான எமது உரிமைகளை பறித்து எம்மை அடக்கி ஆண்டார்கள். பல்கலைக்கழக தெரிவில் கூட எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.

1957ஆம் ஆண்டு தீர்க்கதரிசியான தந்தை செல்வா அவர்கள் அந்த சமயத்தில் இலங்கையின் பிரதமராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா அவர்களுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள முயற்சித்தார். ஒப்பந்தம் செய்துகொண்டார். ஆனால் அந்தவேளையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜே.ஆர்.ஜயவர்தன அவர்கள் பிக்குகளுடன் இணைந்து ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடத்தி அவ் ஒப்பந்தம் கிழித்தெறியப்படுமளவிற்கு செயற்பட்டார்.

அதைத் தோடர்ந்து 1958ஆம் ஆண்டில் இந்நாட்டில் பெரியதொரு இனக்கலவரம் உருவானது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியிலிருந்த நேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் இந்த இனப்படுகொலைகளும் கலவரங்களும் நடைபெற்றன. 1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி பெரியதொரு இனக்கலவரத்தை உருவாக்கியது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் வடகிழக்கிற்கு வெளியில் படுகொலை செய்யப்பட்டனர்.

உச்சக்கட்ட பாதுகாப்புடனிருந்த வெலிக்கடை சிறையினுள்ளே 53தமிழ் அரசியற்கைதிகள் கொல்லப்பட்டனர். இம்மூன்று இனக்கலவரங்களுக்கும் பின்னணியிலிருந்து செயற்பட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சினர். ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் தனது குள்ளநரித் தந்திரத்தினால் வீறுகொண்டெழுந்த எமது ஈழ விடுதலைப் போராட்டத்தை சிதறடித்து அது மௌனிப்பதற்கு காரணமாக இருந்தார்.

இந்த நாட்டை மாறிமாறி ஆண்ட இருபெரும்பான்மைக் கட்சிகளும் தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்காது மறுத்தனர். 1957ஆம் ஆண்டு சமஷ்டியுடன் கூடிய பண்டா செல்வா ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருக்குமானால் கடந்த காலங்களில் நாங்கள் பெரும் அழிவுகளை சந்தித்திருக்கமாட்டோம். தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு யாரால்?எங்கு?ஏன் உருவாக்கப்பட்டது என்பதை நாம் நன்கு அறிவோம். தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியாக போராடிக்கொண்டிருந்தபோது அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுப்பதற்காக 2001ஆம் ஆண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்தவேண்டிய நேரத்தில் தமிழ் மக்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடமிருந்து பிரித்து அதன் பலத்தை உடைக்க வேண்டும் என்பதற்காக இரண்டு பேரினவாதக் கட்சிகளும் களமிறங்கியிருக்கின்றன. வடக்கு கிழக்கில் தங்களுடைய முகவர்கள் மூலமாக ஒவ்வொரு வட்டாரத்திலும் கோடிக்கணக்கான பணத்தினை செலவிட்டு தமிழ் மக்களுடைய வாக்குகளை பிரிப்பதற்கு முனைகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் அவர்கள்                                                                                                                                                           
2010 ஆண்டில் நீலச் சட்டையுடன் வந்து ஹிஸ்புல்லா அவர்களை பாராளுமன்ற உறுப்பினராக்கி அமைச்சராக்கி அழகு பார்த்தார். ஹிஸ்புல்லா அவர்கள் ஓட்டமாவடியிலிருந்த கோயிலை இடித்து அந்தக் காணியில் மீன் சந்தையை கட்டி அழகு பார்த்தவன் நான் என்று கூறியவராவார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் 2015ஆம் ஆண்டு  பச்சைச் சட்டையுடன் வந்து அமீரலி அவர்களை பாராளுமன்ற உறுப்பினராக்கி அமைச்சராக்கி அழகு பார்த்தார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதியில் 6500வாக்குகளைப் பெற்று அமீரலி அவர்களை பாராளுமன்ற உறுப்பினராக்கியிருக்கின்றார். ஆனால் தற்போது இவர்களது கபட நாடகங்களை பட்டிருப்புத் தொகுதி மக்கள் உணர்ந்துவிட்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் பட்டிருப்புத் தொகுதியில் களுதாவளை பிரதேசத்திலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் அன்னதான மடம் ஒன்றை அமைப்பதற்காக கடந்த பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது அத்திவாரக்கல்லை நாட்டினார். ஆனால் இன்றுவரை அந்தக் கல் முளைக்கவில்லை.

பட்டிருப்பு குருமண்வெளி பாலம் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுக்கமைய திட்டம் முன்மொழியப்பட்டு அதற்கான ஆரம்ப வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அவர் அதற்கான நற்பெயரை பெற்றுக்கொள்வதற்காக லக்ஸ்மன் கிரியெல்ல அவர்களை அழைத்துவந்து அவசரஅவசரமாக அதற்கான கல்லை நாட்டுகின்றார்.

களுவாஞ்சிகுடியில் அமீரலி அவர்களுக்கு இணைப்பாளராக இருந்துகொண்டு பணத்திற்காக தொழிலை விற்றுக்கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை குறைகூறுகின்ற இவர்கள் இன்று வாக்குகளுக்காக தமிழ் மக்களிடம் வருகின்றார்கள்.

இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளின் அமைப்பாளர்களான இவர்களுக்கு வேட்பாளர்களாக தமிழ் மக்கள் மத்தியில் சென்று வாக்கு கேட்பதற்கு என்ன அருகதை இருக்கின்றது? இவர்களும் கடந்தகால யுத்தத்தில் தங்களது உறவுகளை இழந்திருக்கலாம்.

ஆனால் மானங்கெட்ட இவர்கள் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை மறந்து தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதற்காகவும் வருகின்றார்களென்றால் இவர்கள் உண்மையில் தமிழர்கள் இல்லை.