அரசியலமைப்பினை நிராகரியுங்கள் என்பவர்களிடம் மாற்று தீர்வு என்ன இருக்கின்றது –அரியநேத்திரன் கேள்வி

மாற்றுத் தலைமையை வென்றெடுப்பதற்காகவும் அரசியல் யாப்பை நிராகரிப்பதற்காகவும் வாக்களியுங்கள் என கூறும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பல உயிர்களை தியாகம் செய்த வடக்கு கிழக்கு மக்களுக்காக நீங்கள் கொண்டுவரப்போகின்ற தீர்வு என்ன? என முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பதினான்கு கட்சிகள் போட்டியிடுகின்றன. வாக்குகளை சிதறடிப்பதற்காகவே இக்கட்சிகள் யாவும் போட்டியிடுகின்றன. விகிதாசார முறைத் தேர்தல் என்பது கடந்த காலங்களில் நடைபெற்றிருந்தாலும் வட்டார முறைத் தேர்தல் என்பதை சுதந்திரமாக வாக்களிக்கக்கூடிய தேர்தலாக நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

2006ஆம் ஆண்டு விகிதாசார முறையிலே வட்டாரங்களுக்கான தேர்தல் ஒன்றை முன்னிட்டு நாங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தபோது அந்த தேர்தல் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் ஒரு உக்கிரமான நிலை இங்கு ஏற்பட்டதன் காரணமாக 2008ஆம் நடைபெற்ற வட்டார முறைத் தேர்தலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அதன் பின்னர்  எங்களை போட்டியிட விடாமல் அடக்குமுறைக்குள்
வைத்துக்கொண்டு எங்களுடைய ஆதரவாளர்களை கடத்தியும் சுட்டுக்கொன்றும் இருந்ததன் காரணமாக 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள்  விடுதலைப் புலிகள் கட்சி மட்டக்களப்பில் ஆட்சி செய்தது.

அதன் பின்னர் மகிந்த ராஜபக்ச,கோத்தபாய ராஸபக்ச போன்றோர் ஆட்சியை கைப்பற்றுவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஆனால் இம்முறை நடைபெறவிருக்கின்ற தேர்தலில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் சுதந்திரமாக வாக்களிக்க முடியும்.அத்துடன் வாக்குகள் நிராகரிக்கப்படும் வீதம் குறைவாகவே இருக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சி,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன இலங்கை அரசாங்கத்தில் இருக்கின்ற சிங்கள கட்சிகளாகும். இதைவிட உதய சூரியன்,சைக்கிள்,தையல் இயந்திரம் போன்ற சின்னங்களில் பலகட்சிகள் நாங்களும் தமிழர் என்ற ரீதியில் போட்டியிட இருக்கின்றார்கள்.

வடகிழக்கில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு எந்த வேலையுமில்லை. ஆகவே முதலில் நீங்கள் சிங்கள கட்சிகளை நிராகரிக்க வேண்டும். வடகிழக்கு என்பது தமிழர்களின் அரசியலுக்காக பல உயிர்களையும் உடைமைகளையும் தியாகங்களை செய்த பின்னர் இன்று அங்கீகரிக்கப்பட்ட தலைமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது. ஆகையால் கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கட்சகிகள் எமது வாக்குகளை சிதறடிப்பதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது.

ஐக்கிய தேசியக் கட்சி,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போன்றவை வடக்கு கிழக்கில் முதலாவதாக நிராகரிக்கப்பட வேண்டிய கட்சிகளாகும். உதயசூரியன் சின்னத்தை கொண்ட கட்சியினர் தங்களுடைய கட்சிதான் தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கபட்டது எனவும் நாங்களும் தமிழர் தான் எனவும் கூறுகின்றார்கள்.எங்களிடமிருந்து விலகிச் சென்ற சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களும் அந்த கட்சியில் தான் இருக்கின்றார். இலங்கை தமிழரசுக் கட்சியை தோற்படிப்பதே எங்களது வேலை என அவர் ஊடக அறிக்கையில் பகிரங்கமாகவே கூறியிருக்கின்றார்.

தமிழ்த் தேசியத்திற்காக தமிழ் மக்களின் ஆதரவை பெற்ற கட்சியை தோற்கடிப்பதாக அவர்கள் சொல்கின்றார்கள் என்றால் அவர்கள் தங்களுடைய பதவி ஆசையை வெளிக்காட்டுவதாகவே அமைகின்றது. சம்பந்தர் ஐயா காலத்தில் எங்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வரவேண்டும் என அவர் எடுக்கின்ற முயற்சியை இல்லாமல் செய்தல், இரண்டாவதாக இலங்கை தமிழரசுக் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற அரசியல் யாப்பை நிராகரித்தல்.அவ்வாறு நிராகரித்தால் அவர்களிடம் மாற்றுத் தீர்வு எதுவும் இல்லை.

மாற்றுத் தலைமையை வென்றெடுப்பதற்காகவும் அரசியல் யாப்பை நிராகரிப்பதற்காகவும் வாக்களியுங்கள் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருக்கின்றார். பல உயிர்களை தியாகம் செய்த வடக்கு கிழக்கு மக்களுக்காக நீங்கள் கொண்டுவரப்போகின்ற தீர்வு என்ன? தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிப்பதற்காக செயற’பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த இரண்டு கட்சிகளும் இரண்டாவதாக மக்களால் நிராகரிக்கப்படவேண்டிய கட்சிகளாகும்.

மூன்றாவதாக நிராகரிக்கப்படவேண்டிய கட்சி தையல் இயந்திர சின்;னத்தில் போட்டியிடுகின்ற கருணா அம்மானின் கட்சியாகும். ஆரம்பத்திலிருந்து தமிழ் மக்களுக்காக போராடிவருகின்ற கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

எமது இனத்தையும் மண்ணையும் பாதுகாப்பதற்காக வடமாகாண மக்களைவிட கிழக்கு மாகாண மக்களுக்கு தீர்வு விரைவாக தேவைப்படுகின்றது. அதற்கான நடவடிக்கைகளை எமது சம்பந்தன் ஐயா மேற்கொண்டுவருகின்றார். வடக்கில் 98வீதமானவர்கள் தமிழர்கள் ஆவர். காலங்கள் கடந்தாலும் அங்கு தமிழர்கள் தான் வாழ்வார்கள். ஆனால் கிழக்கில் காலங்கடந்தால் எங்களுடைய நிலங்கள் எங்களுக்கு தெரியாமலே பறிபோய்விடும்.

யானை சின்னத்தில் போட்டியிடுகின்றவர்கள் அமீரலியால் தெரிவு செய்யப்பட்டவர்களாவர். அமீரலிக்கும் அமைப்பாளருக்கும் இடையில் பலத்த சண்டைகள் இடம்பெற்றபின்னரே வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களை வைத்துக்கொண்டு எங்களுடைய நிலத்தை பறிப்பதே அவர்களுடைய உள்நோக்கமாகும்.

உள்ளுராட்சி சபையின் கடமைகள் என்பது காண்களை அமைத்தல்,சுகாதார வசதிகளை செய்தல் போன்ற சிறிய அபிவிருத்திகளை செய்தலாகும். எந்த தேர்தலாக இருந்தாலும் சர்வதேசம் அதனை கண்காணித்துக்கொண்டுதான் இருக்கின்றது. எங்களுடைய தலைமை சம்பந்தன் ஐயா தான், அவரின் பின்னால் தமிழ் மக்கள் நிற்கின்றார்கள் என்பதை நாங்கள் முதலில் நிரூபித்துக் காட்ட  வேண்டும்.