பழுகாமத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் -குப்பை கொட்டுவதை இடைநிறுத்திய பிரதேசசபை

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட திருப்பழுகாமத்தில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிராக பிரதேச  மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் குப்பைகள் கொண்டுவந்த ட்ரக்டர்களையும் மறித்து தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

படுவான்கரை பிரதேசத்தில் இயற்கை எழில் நிறைந்த பகுதியாக காணப்படும் திருப்பழுகாமம் வள்ளுவர்மேடு பகுதியில் கடந்த ஒன்பது வருடங்களாக குப்பைகள் கொட்டப்பட்டுவருகின்றன.

வள்ளுவர்மேடு பகுதியானது வயல்வெளிகளும் அழகான குளக்கரையினையும் அழகான இயற்கை வனப்புகளையும் மக்களின் குடியிருப்புகளையும் கொண்ட அழகான பகுதியாகும்.

இப்பகுதியில் உள்ள மக்கள் மாலை வேளைகளிலும் வெப்பமான காலநிலைப்பகுதியிலும் இப்பகுதியிலேயே கடந்த காலத்தில் ஓய்வெடுக்கும் பகுதியாக பயன்படுத்திவந்துள்ளனர்.

2008ஆம் ஆண்டு போரதீவுப்பற்று பிரதேச சபையினால் குறித்த பகுதியில் சேதனைப்பசளை தயாரிப்பதற்கு என இடம் ஒதுக்கீடுசெய்யப்பட்டு அங்கு குப்பைகள் கொட்டப்பட்டுவந்துள்ளன.

எனினும் குறித்த பகுதியில் குப்பைகள் கொட்டும் நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த பகுதி குப்பைகள் கொட்டும் இடமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

குப்பைகளை தரம்பிரித்து சேதனைப்பசனை செய்வதற்காக அமைக்கப்பட்ட நிலையம் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் குறித்த பகுதியில் குப்பைகள் கொட்டும் நடவடிக்கை மேற்கொண்டுவரப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த பகுதியில் குப்பைகள் கொட்;டப்படுவதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன் நீர்நிலைகளும்,இயற்கை சூழலும் பாதிக்கப்படுவதுடன் குடியிருப்பாளர்கள் தினமும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிவருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

திருப்பழுகாhம்,கோவில்போரதீவு,பெரியபோரதீவு,முனைத்தீவு ஆகிய பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் இந்த திருப்பழுகாமம் வள்ளுவர் மேடு பகுதியிலேயே கொட்டப்படுகின்றது.

இந்த பகுதிகளில் கால்நடைகளும் வளர்க்கப்படுவதன் காரணமாக கால்நடைகளும் பாதிக்கப்படும் நிலையிருப்பதாக இப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்குமாறு கடந்த காலத்தில் பல்வேறு கோரிக்கைகள் விடுத்தபோதிலும் யாரும் இதனை கருத்தில்கொள்ளவில்லையென தெரிவிக்கும் மக்கள் இப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்தனர்.
இன்று புதன்கிழமை காலை குறித்த பகுதிக்கு குப்பைகள்  கொட்டுவதற்கு கொண்டுவரப்பட்ட டரக்டர்களை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் குப்பைகள் கொட்டுவதை அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்தனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் ஏ.ஆதித்தன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன் ஒரு மாதம் தமக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

எனினும் அதனை நிராகரித்த மக்கள் இப்பகுதியில் குப்பைகொட்டுவதற்கு இனியொருபோதும் அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்ததுடன் தமது பிரச்சினைகள் தொடர்பில் பல தடவைகள் கவனத்திற்கும் கொண்டுவந்தபோதிலும்  பிரதேசசபை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டினர்.

இதன்போது குறித்த பகுதியில் குப்பை கொட்டுவதை தற்காலிகமாக நிறுத்துவதாகவும், திருப்பழுகாhம்,கோவில்போரதீவு,பெரியபோரதீவு,முனைத்தீவு உட்பட ஆறு பகுதிகளில் குப்பைகள் சேகரிப்பதை தற்காலிகமாக நிறுத்துவதாகவும் நாளை வியாழக்கிழமை காலை விசேட கூட்டம் ஒன்றை கூட்டி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் பிரதேசசபையின் செயலாளர் தெரிவித்தார்.