பொதுசுகாதார பரிசோதகரை தாக்கிய நபர் 09 ஆம் திகதி வரை விளக்கமறியல்

(லியோன்)

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  - சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி டெங்கு  ஒழிப்பு பணிப்பிரிவு ஆகியவற்றின்  பணிப்புரைக்கு அமைவாக  நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு  சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.


இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு பெருக்கம் அதிகமாகவுள்ள பகுதிகளிலும் இந்த  டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதற்கு அமைய  மட்டக்களப்பு காத்தான்குடி பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவு  பகுதிகளில் டெங்கு நுளம்புகள் அதிகமாக உள்ள பகுதியாக இனம் காணப்பட்ட பகுதிகளை  டெங்கு வலயமாக  பிரகடனப்படுத்தப்பட்டு அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல்  மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பொதுசுகாதார பரிசோதகர்களுடனான கலந்துரையாடல் நேற்று  நடைபெற்றது .

இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் காத்தான்குடி பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவு  பகுதிகளில் டெங்கு நுளம்புகள் அதிகமாக உள்ள பகுதியாக இனம் காணப்பட்ட பகுதிகளில் சேதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன

இந்த நடவடிக்கையின் போது காத்தான்குடி இக்பால் பொது சுகாதார பிரிவில் கடமை புரியும்  பொதுசுகாதார பரிசோதகர் எஸ் .கமலன் என்பவர் தாக்கப்பட்டுள்ளார் .

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அலுவலக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தை முறைப்பாடு செய்யப்பட்டதுடன்  தாக்குதலுக்குள்ளான பொதுசுகாதார பரிசோதகர் காத்தான்குடி ஆதார  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பெற்றுவருகின்றார் .

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என் .பி .கஸ்தூரி ஆராச்சி  கேட்டபோது  கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய பொதுசுகாதார பரிசோதகர்க்கு தாக்குத நடத்திய குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த நபரை எதிவரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவு பெறப்பித்துள்ளதாக  காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார் .


இதேவேளை சம்பவம் தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரதி பணிப்பாளர் எம் . அச்சுதன் தலைமையில் பொதுசுகாதார பரிசோதகர்களுடன்  இன்று  இடம்பெற்ற கலந்துரையாடலில் பின் குறித்த சம்பவம் தொடர்பில் பிரதி பணிப்பாளர் தெரிவிக்கையில் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது சம்பந்தப்பட்ட  உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்