News Update :
Home » » மட்டக்களப்பு - மயிலம்பாவெளி பொலிஸ் காவலரணை அகற்றுமாறு கோரி ஜனாதிபதிக்குக் கடிதம்

மட்டக்களப்பு - மயிலம்பாவெளி பொலிஸ் காவலரணை அகற்றுமாறு கோரி ஜனாதிபதிக்குக் கடிதம்

Penulis : kirishnakumar on Wednesday, December 20, 2017 | 1:49 AM

மட்டக்களப்பு - மயிலம்பாவெளியில் அமைந்துள்ள கருணாலயம் எனும் தர்ம ஸ்தாபனத்திற்குச் சொந்தமான காணியில் மிக நீண்ட காலமாக நிலை கொண்டுள்ள பொலிஸ் காவலரணை அகற்றுமாரு கோரி கருணாலயம் அமைப்பின் முகாமையாளர் இரா.முருகதாஸ் கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு இன்று அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தர்ம செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் எமது நிறுவனம் மயிலம்பாவெளியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் ஆலயம், இராம்நகர் வீட்டுத்திட்டம், கருணாலயம் சிறுவர் இல்லம் என்பவற்றை, ஸ்தாபித்து சேவை புரிந்து வருவதுடன், ஆசிரியர், மாணவர்கள் மத்தியில் விழுமியங்களையும், நற்பண்புகளையும் விதைக்க விசேட செயற்திட்டம் ஒன்றையும் செய்து வருகின்றது.

கடந்த அசாதாரண சூழல் நிலவிய காலத்தில் எமக்குச் சொந்தமான காணியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது.

இந்த பொலிஸ் காவலரணை அகற்றி அவ்விடத்தை எமக்கு ஒப்படைக்குமாறு கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கோரி வருகின்றோம்.

இது சம்மந்தமாக சம்மந்தப்பட்ட அமைச்சு அதனோடு இணைந்த அதிகாரிகள், ஆகியோருக்கும் தெரியப்படுத்தியது மட்டுமல்லாமல், மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் என்பவற்றிலும் இவ்விடயம் பிரஸ்த்தாபிக்கப்பட்டு 3 தடவை தங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.
இவற்றுக்குரிய தீர்வு கிடைக்காத நிலையில் 2016.12.31 அன்று இது சம்மந்தமான கவனயீர்ப்பு பிரார்த்தனை நிகழ்வை எமது சிறார்களுடன் இணைந்து மேற்படி பொலிஸ் காவலரண் முன்பாக நடாத்தினோம்.

2017.04.26 அன்று திகதியிடப்பட்ட கடித்தத்தின் மூலம், ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால், இவ்வருடம் டிசம்பர் மாதமளவில் காணியும், கட்டடத்தையும் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பபட்டது.

பின்னர் நாம் எழுத்து மூலம் தொடர்பு கொண்டபோது 2017.10.10 திகதியிட்டு, இது விடயமாக பொலிஸ் தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிர்வாகத்திற்கு ஆலோசனைக்காகவும், கட்டளைக்காகவும், கோவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் எமது விடயம் இழுத்தடிப்புச் செய்யப்படுவதாக தெளிவாகப் புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளதுடன் 151 வருடத்தை பெருமையுடன் கொண்டாடும் பொலிஸ் திணைக்களத்தின் இழுத்தடிப்பும், நியாயமற்ற நடவடிக்கையும், எம்மை வேதனையையும், விரக்தியையும் கொள்ள வைத்துள்ளது.
தாங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் அண்மையில் உரையாற்றிய போது கிழக்கு மாகாணத்தில் படையினர் ஆக்கிரமித்திருந்த சகல காணிகளையும், விடுவித்து விட்டதாகத் தெரிவித்திருந்தீர்கள்.
எனினும் எமது காணி இன்றுவரை விடுவிக்கப்படாததை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதுடன், பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளை, கவனத்திற்கெடுத்து, 2017.12.31 இற்கு முன் காணியைப் பெற்றுத்தர ஆவன செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த விடயம் தொடர்பாக விளக்கமளிப்பதற்கு 32 சிறார்கள் மற்றும் இங்கு கடமையாற்றும் 52 ஊழியர்களுடன், தங்களை நேரில் சந்தித்து கலந்துரையாட நேரத்தை ஒதுக்கித் தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இதேவேளை, கடிதத்தின் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், மட்டக்களப்பு அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு பணிப்பாளர், கொழும்பு பொலிஸ்மா அதிபர், கொழும்பு சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (நிர்வாகம்), மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger