வந்தாறுமூலையில் இடம்பெறவுள்ள தாமோதரமாத நகர் சங்கீர்த்தனப் பெருவிழா

சிறப்புமிகு கார்த்திகை மாதமான தாமோதர மாதத்தை முன்னிட்டு அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினரின் பங்கேற்புடன் வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய பரிபாலனசபை, வந்தாறுமூலை கண்ணன் பஜனைக் குழு, வந்தாறுமூலை அறநெறிப் பாடசாலை அமைப்பினரின் ஏற்பாட்டில்  "தாமோதரமாத நகர் சங்கீர்த்தனப் பெருவிழா" கிழக்கின் திருப்பதியாக சிறப்பித்து கூறப்படுகின்ற  வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயத்தில் 03.11.2017 வெள்ளிக்கிழமை பி.ப 05.00க்கு இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் முதல் நிகழ்வாக நகர் சங்கீர்த்தனம் மஹா விஷ்ணு ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு வீசி வீதி வழியாக சென்று பெரியதம்பிரான் வீதி ஊடாக களுவன்கேணி வீதி, பிரதான வீதியை அடைந்து அங்கிருந்து ஆலையடி வீதி, உப்போடை வீதி ஊடாக அம்பலத்தடியை வந்தடைந்து மீண்டும் பிரதான வீதி ஊடாக வேக்கவுஸ் வீதி, விஷ்ணு ஆலய முன் வீதி ஊடாக ஆலயத்தை வந்தடையவுள்ளது.

அதனை தொடர்ந்து மஹா விஷ்ணு ஆலய அலங்கரிக்கப்பட்ட கண்ணன் அரங்கிலே மங்கள விளக்கேற்றல், ஆசியுரை, வரவேற்பு நடனம், பகவத்கீதை சொற்பொழிவு, தாமோதராஷ்டக ஆரார்த்தி, பஜனை மற்றும் இறுதியாக பிரசாதம் என்பன இடபெறவுள்ளது.

பகவானின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ண அவாதாரத்தில் கிருஷ்ணரை அன்னை யசோதா உரலிலே கட்டிப்போட்ட வேளை அங்கே மரங்களாக சாபம் பெற்றிருந்த குபேரரின் இரண்டு புதல்வர்களான மணிக்ரீவன், நளகூவரன் இருவருக்கும் சாப விமோச்சனம் அளித்த இந்த புனிதம்மிகு கார்த்திகை மாதத்தில் தாமோதர லீலையை மனதார நினைத்து நெய் விழக்கேற்றி பகவானுக்கு ஆரார்த்தி செய்து வழிபட்டு வந்தால் நாம் இப்பிறவி மட்டுமல்லாது பலகோடி பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அகலும் என புராண இதிகாசங்கள் சிறப்பித்து கூறுகின்றன.

எனவே அனைத்து பக்தகோடி பெருமக்களும் பக்தி சிரத்தையோடு ஆசாரசீலர்களாக  நகர் சங்கீர்த்தனப் பெருவிழாவில் கலந்து கொண்டு எல்லாம் வல்ல பகவான் கிருஷ்ணரின் திவ்விய திருவருள் பெற்றுய்யுமாறு அனைவரையும் அன்புடன் உளம் உவர்ந்து அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.