மக்களுக்கு குடிநீரை வழங்குவது அரசின் கடமை.


(பழுகாமம் நிருபர்)
வறட்சியான காலங்களில் மக்களுக்கு குடிநீரை வழங்குவது அரசின் கடமை என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் சாணக்கியன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, வறட்சியான காலங்களில் மக்களுக்கு குடிநீர் வழங்குவது அரசினது கடமையாகும். தற்போது படுவான்கரை பிரதேச பல பகுதிகள் குடிநீருக்காக பல மைல்கள் சென்று போட்டிபோட்டு பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் இவ்வாறான அனர்த்தங்களின் விசேட நிதிகளை ஒதுக்கீடு செய்து மக்களுக்கான தேவைகளை நிறைவேற்ற வேண்டும். இப்பிரதேச மக்கள் வாழ்நாள் முழுவதும் குடிநீரை பெறுவதில் பெரும் சவாலை எதிர்நோக்குகின்றனர். இவர்களுக்கான நிரந்தர தீர்வாக  தற்போது குழாய் நீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றாலும் குடிநீர் தேவையான பல பிரதேசங்கள் இத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்தாகவும் தெரிவித்தார்.
போரதீவுப்பற்று பல பிரதேசங்களுக்கு கடந்த வருடமும், இந்த வருடமும் குடிநீர்த்தாங்கிகளை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு வழங்கி வைத்தது. போரதீவுப்பற்று பிரதேச சபையினர் தங்களிடம் உள்ள வளங்களை வைத்து முடிந்தவரை மக்களுக்கு குடிநீரை வழங்கி வருகின்றனர் என மேலும் தெரிவித்தார்.