ஏறாவூர் இரட்டைக்கொலையுடன் தொடர்புடையவர்கள் பிணையில் விடுதலை

மட்டக்களப்பு,ஏறாவூரில் இடம் பெற்ற தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் இருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

 ஏறாவூர்  முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த  நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது  மகள் மாஹீர் ஜெனீராபானு (வயது 32) ஆகியோர்  கடந்த ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரட்டைக் கொலை தொடர்பான வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (12.9.2017) எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த ஆறு சந்தேக நபர்களில் ஏறாவூரைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது பாஹிர் மற்றும் அபூபக்கர் முஹம்மது பிலால் ஆகிய இரண்டு சந்தேக நபர்களுக்கும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது.


மட்டக்களப்பு மேல் நீதிமன்ற  நீதிபதி எம்.வை.இர்ஸதீன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (12.9.2017) இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இவர்களிருவரையும்; தலா இரண்டரை இலட்சம் ரூபா ரொக்கமும் இவ்விருவருக்கும் தலா ஒருவருக்கு இருவர் வீதம் ஐந்து இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் இவர்களிருவரையும் பிணையில் செல்ல மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.இர்ஸதீன் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இவர்கள் இருவரும் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கையொப்படமிடல் வேண்டும் எனவும் இவர்களிருவருக்கும் கட்டளையிடப்பட்டுள்ளது.

பிணை வழங்கப்பட்டுள்ள இஸ்மாயில் முஹம்மது பாஹிர் என்பவர்  இந்த இரட்டைப் படுகொலை செய்யப்பட்ட ஜெனீரா பானுவின் கனவருடைய சகோதரராகும்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட அறுவரும், கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து, தொடர்ச்சியாக விளக்கமறியல்  இருந்து வந்தனர்.

இந்த நிலையில் இதில் இரு சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏறாவூரைச்சேர்ந்த உஸனார் முஹம்மது தில்ஷான் மற்றும்   கலீலுர் ரஹ்மான் அஹம்மது றாசிம் காவத்தமுனை, ஓட்டமாவடியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது அஸ்ஹர் ஏறாவூர் நகர் வீதியைச் சேர்ந்த  இஸ்மாயில் சப்ரின் ஆகிய நான்கு பேரும் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.