யானைதாக்கிய மக்களை பார்வையிடாத கிராம உத்தியோகஸ்தர் உடனடி இடமாற்றம்.


(பழுகாமம் நிருபர்)
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட எல்லைப்புற கிராமமான சின்னவத்தை கிராம மக்களுக்கு ஒழுங்கான முறையில்  சேவை புரியாத கிராம உத்தியோகஸ்தரை இன்று(18) உடனடியாக பிரதேச செயலாளர் உள்ளக இடமாற்றம் செய்தமையுடன் குறித்த கிராமத்திற்கு புதிய கிராம சேவையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமாக குறித்த கிராம உத்தியோகஸ்தர் மீது அதிருப்தி கொண்ட  கிராம  மக்கள் பிரதேச செயலாளரிடம் முறைப்பாடுகள்  முன்வைக்கப்பட்டமையினையும், கடந்த சனிக்கிழமை (16) அதிகாலை 12.30மணிக்கு ஐந்து வீடுகளை யானைகள் தாக்கியிருந்தமை தொடர்பாக கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்தும் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட வரவில்லை. இதனை பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்ததன் பிரகாரம் உடனடியாக அக்கிராம உத்தியோகத்தரை உள்ளக இடமாற்றம் செய்ததுடன், குறித்த பிரதேசத்திற்கு அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மற்றும் நிர்வாக கிராம உத்தியோகஸ்தர், புதிய கிராம சேவையாளர் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை பார்வையிட்டதுடன் நிவாரணங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற அதிகஷ்ட எல்லைப்புற கிராமங்களில் வாழும் கிராம மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில் அரச அதிகாரிகள் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கவேண்டும் எனவும் இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக செயற்பட்ட பிரதேச செயலாளருக்கு கிராம மக்கள் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.