ஒருநாட்டினது சொத்து என்பது இயற்கையிலேயே தங்கியுள்ளது –களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர்

ஒரு நாட்டினது சொத்து என்பது இயற்கையிலேயே தங்கியுள்ளது.அந்த இயற்கையினை பாதுகாத்து சரியானமுறையில் பராமரித்து எதிர்கால சந்ததிக்கு வழங்கவேண்டிய பாரிய பொறுப்பு அனைவரும் சுமந்துள்ளதாக மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தெரிவித்தார்.

தேசிய கரையோர மற்றும் கடல் வளங்களின் பாதுகாப்பு வாரமும் கரையோர தூய்மைப்படுத்தலும் தேசிய நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் கடற்கரையில் நடைபெற்றது.

மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கடல்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் கரையோரம்பேணல் மூலவள முகாமைத்துவ திணைக்களம் தேசிய நிகழ்வாக நடாத்திவரும் இந்த நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வாக நடைபெற்றது.

கடல்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் கரையோரம்பேணல் மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஆர்.ரஜீகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம், கடல்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் கரையோரம்பேணல் மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் கமாண்டர் புத்திக ஜயவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பண்டார,களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி பாக்கியராஜா உட்பட முப்படையினர்,பொலிஸார்,பாடசாலை மாணவர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,கிராம சேவையாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கடல் வளத்தினை பாதுகாக்கும் வகையில் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதி வாரம் தேசிய கரையோர மற்றும் கடல் வளங்களின் பாதுகாப்பு வாரமும் கரையோர தூய்மைப்படுத்திலும் நிகழ்வு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய நடாத்தப்பட்டுவருகின்றது.

கடல் வளத்தினை பாதுகாக்கும் வகையில் இந்த நிகழ்வு தொடர்ந்து அனுஸ்டிக்கப்பட்டுவருவதுடன் இந்த வாரத்தில் கடற்கரைப்பகுதி தூய்மைப்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்படுகின்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர்,

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இந்த தினம் தொடர்ந்து அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.2015ஆம் ஆண்டில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டுவருகின்றது.இந்த ஆண்டு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

தேசிய நிகழ்வாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய கரையோர மற்றும் கடல் வளங்களின் பாதுகாப்பு வாரமும் கரையோர தூய்மைப்படுத்தலும் தேசிய நிகழ்வு மாவட்ட மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் நடாத்தப்பட்டு மக்கள் விழிப்புணர்வூட்டப்படுகின்றனர்.

ஒருநாட்டின் சொத்து என்பது இயற்கையிலேயே தங்கியுள்ளது.இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரும் உயிரும் இந்த நாட்டின் சொத்தாகும்.அந்தவகையில் இயற்கையுடன் தொடர்புகொண்ட ஒவ்வொரு இடங்களும் சரியாக பாதுகாக்கப்பட்டு,பராமதிக்கப்பட்டு எதிர்கால சந்ததியிடம் கையளிக்கவேண்டிய பாரிய பொறுப்பினை நாங்கள் சுமந்துள்ளோம்.

இதற்கு கரையோரம் பேணும் திணைக்களம் மட்டுமோ கரையோரம்பேணல் மூலவள முகாமைத்துவ திணைக்களம் மட்டுமோ சூழல்பாதுகாப்பு திணைக்களம் மட்டுமோ இந்த நிகழ்வுகளை முன்னெடுத்து செல்லமுடியாது.ஒவ்வொருவருக்குள்ளும் இந்த உணர்வுகள் வரவேண்டும்.அதற்காகவே இவ்வாறான தினங்கள் அனுஸ்டிக்கப்படுகின்றன.