யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கையளிக்கும் நிகழ்வு

(லியோன்)


யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட 76 வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு -மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் பிரதம அதிதியாக  கலந்து கொள்கிறார். மீள்குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் முறக்கொட்டான்சேனையில் 76 வீடுகள் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை நடைபெறவுள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.


கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், பிரதம அதிதியாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்புமீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பிரதம அதிதியாகக்கலந்து கொள்வதுடன், சிறப்பு அதிதிகளாக மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஜீ.சிறிநேசன், எஸ்.வியாளேந்திரன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.


விசேட அதிதிகளாக அமைச்சின் செயலாளர் எஸ்.சுரேஸ், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரும், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதி மற்றும் உதவித்திட்டமிடலாளர்களும், அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.


யுத்த காலத்தில் சேதமடைந்து மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கென 8 லட்சம் ரூபா செலவில்  கட்டிமுடிக்கப்பட்ட  வீடுகள் இதன்போது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.


மட்டக்களப்பு மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 2016ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 820 மில்லியனில் மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசங்களான கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று தெற்கு, கோரளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று, மண்முனை மேற்கு போரதீவுப்பற்று ஆகிய பிரிவுகளில் 1035 வீடுகள் அமைக்கப்பட்டுபயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அத்துடன்  சேதமடைந்த 756 வீடுகள் 110 மில்லியனில் திருத்தப்பட்டுள்ளன. அதே போன்று இவ்வருடம் 525 மில்லியன் நிதி ஒருக்கீடு செய்யப்பட்டு 656 வீடுகள் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.


மீள்குடியேற்ற அமைச்சானது மாவட்டத்தின் 140654 பொது மக்கள் பயன் பெறும் வகையில், 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளுக்கென மொத்தமாக 9213 திட்டங்களுக்காக 2209.2 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்தது. அவற்றில், வீடுகள் அமைத்தல், பகுதியளவில் சேதமடைந்த வீடுகள், மலசலகூடம் அமைத்தல், குடிநீர் விநியோகம், மின்விநியோகம், பாடசாலை அபிவிருத்தி வேலைகள், வீதி புனரமைப்பு உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதார மேம்பாடுகளுக்கான திட்டங்கள் அடங்குகின்றன.


இதில், யுத்தத்தினால் கணவனை இழந்தவர்களின் குடும்பங்களில் 396க்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஏனைய திட்டங்களுக்குள்ளுமாக 1804 குடும்பங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. அதே போன்று பெற்றோரை இழந்தவர்களின் 55 குடும்பங்கள், அங்கவீனமுற்றோரின் குடும்பங்கள் 531, காணாமல்போனோரது குடும்பங்கள் 276, யுத்தத்தினால் உயிரிழந்தவர்களின் 265 குடும்பங்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட 305 குடும்பங்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் 7202மாக மொத்தம் 10438 குடும்பங்கள் 2016, 2017ஆம் ஆண்டுகளில் மீள்குடியேற்ற அமைச்சின் திட்டங்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.


போர் நிறைவு பெற்றதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தல் பாதிக்கப்பட்ட வீடுகளாக கணக்கெடுக்கப்பட்ட 23287 வீடுகளில் இதுவரை 17495 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வருடத்தில் 3036 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் மீள்குடியேற்ற அமைச்சு 656 வீடுகள், தேசிய வீடமைப்பு அதிகாரசபை 1000 வீடுகள், ஐரோப்பிய ஒன்றியம் 556 வீடுகள், இந்திய வீட்டுத்திட்டத்தில் 300 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


இதேவேளை 500 பொருத்துவீடுககளுக்கான அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.


யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளின் கணிப்பின் படி 2756 வீடுகள் இன்னமும் தேவையாக உள்ளதுடன், இக் காலப்பகுதியில் அதிகரித்த குடும்பங்களுக்கான 12524 வீடுகளும் தேவையாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.  .