பழுகாமம் மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தின் தேரோட்டம் .

 
(பழுகாமம் நிருபர்)
மீன்மகள் பாட வாவி மகள் ஆடும் இயற்கையினால் அரணாக்கப்பட்ட மட்டக்களப்பின் தென்மேற்கே ஏரோடும் வழியே நீரோடி நெல் விளையும் சுற்றி வர ஆறினாலும் சுனைகளாலும் சூழப்பட்ட பழம்பெரும் பதியாம் பழுகாமத்திலே வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ மாவேற்குடாப்பிள்ளையாரின் தேரோட்டம் நாளை 25.08.2017ம் திகதி இடம்பெறவுள்ளது. 

இவ் ஆலயத்தின் துவஜாரோகண மகோற்சவம் கடந்த 15.08.2017ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து பத்து நாட்களாக திருவிழாக்களான புஸ்பாஞ்சலி திருவிழா, வேதபாராயண திருவிழா, கற்பூரசட்டி திருவிழா, திருவேட்டை திருவிழா, மாம்பழ திருவிழா, திருவிழா என்பன இடம்பெற்று இன்று சப்புற திருவிழா இடம்பெறவுள்ளது. 
பஞ்சமுக விநாயகன் திராவிட முகப்பத்திர முறையில் அமைந்த 32' உயரமான தேரிலே பக்தர்களுக்கு அருளாட்சி கொடுக்கவுள்ளார். 2009.08.21ம் திகதி வெள்ளோட்டம் கண்ட தேரானது 2009.08.23ம் திகதி பஞ்சமுக விநாயகருடன் வீதி உலா சென்றது. ஒன்பதாவது வருடம் இம் வீதியுலா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.