பிரித்தானியாவில் சாதனை படைத்த பெரியகல்லாறு சிறுவன்

இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் மாணவன் ஒருவருக்கு பிரித்தானியாவில் மகத்தான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இலங்கையை சேர்ந்த கிரிஸ் கோபிகிரிஷ்ணா என்ற மாணவனுக்கு பிரித்தானியாவின் பிரபல காற்பந்தாட்ட கழகம் ஒன்றில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரித்தானியாவின் West Midlands பகுதியிலுள்ள Walsall காற்பந்து கழகம், கிரிஸ் கோபிகிரிஷ்ணாவை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொண்டுள்ளது.

இதன்மூலம் 9 வயதிற்குட்பட்டவர்களுக்கான ஒப்பந்தத்தில் இலங்கை மாணவனுக்கு கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

பொதுவாக Walsall போன்ற கழகத்தினால் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் விளையாடியவர்களில் சிறந்தவர்களை தெரிவு செய்தே ஒப்பந்தம் வழங்கப்படும். எனினும் இலங்கை மாணவனுக்கு முதல் போட்டி நிறைவடைந்தவுடனே இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

பிரித்தானியாவின் 9 வயதுக்குட்பட்ட தொழில்முறை அணியில் முதல் இலங்கை வீரராக கிரிஸ் கோபிகிரிஷ்ணா தெரிவாகி உள்ளார்.

கிரிஸ் கோபிகிரிஷ்ணா பிரித்தானியாவின் Coventry என்ற பகுதியில் 2009 ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.

கிரிஸ் கோபிகிரிஷ்ணாவின் பெற்றோர் மட்டக்களப்பு பெரியகல்லாறு  பகுதியில் இருந்து 2006ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் கிரிஸ் கோபிகிரிஷ்ணாவின் தந்தை கருத்து வெளியிடுகையில்,“எனது மகன் Leicester city Fc, Coventry city FC உட்பட நான்கு வெவ்வேறு முக்கிய காற்பந்து கழகங்களில் தெரிவு செய்யப்பட்டார். எனினும் Walsall காற்பந்து கழகத்தினால் நேரடியாக ஒப்பந்தம் கிடைத்தது.

இது அற்புதமான விடயம். இவ்வாறான ஒப்பந்தம் ஒன்று இதுவரையில் யாருக்கும் கிடைக்கவில்லை என்பது எனக்கு உறுதியாக தெரியும்.

இலங்கையை பின்னணியாக கொண்ட ஒவரிடம், பிரித்தானியாவில் பிரபல காற்பந்து கழகம் ஒன்று ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த பாக்கியம் எனது மகனுக்கு கிடைத்துள்ளது.

இந்த விடயம் இலங்கை சிறுவர்கள் மத்தியில் காற்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும். எனது மகன் கிரிஸ் கோபிகிரிஷ்ணா குறித்து நாங்கள் அனைவருக்கும் பெருமைப்பட வேண்டும்.

பிரித்தானியாவின் பிரதான கழகத்தில் கோல்கீப்பராக இலங்கையை சேர்ந்த எனது மகன் மாத்திரமே ஒப்பந்தம் பெற்றுள்ளார் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்” என கோபிகிருஷ்ணா சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Walsall காற்பந்து கழகம் 129 வருட பாரம்பரியத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.