வேலையற்ற பட்டதாரிகளின் வழக்கு நவம்பர் 06க்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் உட்பட நான்கு பேர் மீது மட்டக்களப்பு பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நவம்பர் மாதம் 06ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காந்திபூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் நடாத்திய கவன ஈர்ப்பு போராட்டத்தின்போது மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்களின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் , அரச கரும நடவடிக்கைகளுக்கும் குந்தகம் அல்லது இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள முற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் மார்ச் மாதம் 07ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பான வழக்கு இன்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று புதன்கிழமை (02-08-2017)மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த், அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் தன்னான ஞானரத்ன தேரர் உட்பட நான்கு பேரும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதன் போதே நீதிபதி இந்த வழக்கினை எதிர்வரும் நவம்பர் மாதம் 06ஆம் திகதி வரை ஒத்தி வைத்தார்.