மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் மாடும் இளைஞனும் பலி

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிள்ளையாரடியில் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு(01-08-2017) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மாடு ஒன்றும் உயிரிழந்துள்ளது.

நேற்று நள்ளிரவு கல்குடா,கும்புறுமுலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த மோட்டார் சைக்கிள் வீதியில் நின்ற மாடு ஒன்றுடன் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த கும்புறுமுலையை சேர்ந்த சி.நிசாந்தன்(28வயது)என்னும் இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகமான வேகமே குறித்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.