கிழக்கு மாகாணத்தில் உள்ள 1856 பாலர் பாடசாலைகளிலும் ஒரே நேரத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் உள்ள 1856 பாலர் பாடசாலைகளிலும் ஒரே தினத்தில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளிலும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிரமதானத்தில் பாலர் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 4062 ஆசிரியர்களும் பங்குபற்றியதுடன் பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்,பொலிஸார் முப்படையினரும் ஈடுபடுப்பட்டுள்ளனர்.

வேகமாக பரவிவரும் டெங்கின் தாக்கத்தில் இருந்து பிள்ளைகளை பாதுகாக்கும் வகையில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பயணியர் வீதியில் உள்ள மதர்ஸ்கெயார் பாலர் பாடசாலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் பாடசாலை முதன்மை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.

இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகமும் இணைந்துகொண்டார்.

இன்று காலை 8.00மணி தொடக்கம் பிற்பகல் 1.00மணி வரையில் கிழக்கில் உள்ள 1856 பாலர் பாடசாலைகளிலும் ஓரே நேரத்தில் சுற்றுச்சூழல்,நீர்நிலைகள் அதோடுதொடர்புடைய இடங்களை சுத்தம்செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாலர் பாடசாலை பணியக தவிசாளர் தெரிவித்தார்.