கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா இரண்டாவது நாள் நிகழ்வு

கிழக்கு மாகாண கல்வி,விளையாட்டு,இந்துவிவகார மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்தும் தமிழ் இலக்கியவிழா 2017 இன் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கல்முனையில் நடைபெற்றது.

பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மூன்றாவது ஆண்டாக நடாத்திவரும் தமிழ் இலக்கிய விழாவில் இந்த ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்றுவருகின்றது.

கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த நிகழ்வு கோலாகலமாக நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு அம்பாறை மாவட்டத்தின் கல்முனையில் நடாத்தப்படுகின்றது.

மூன்று நாட்களைக்கொண்டதாக நடாத்தப்படும் இந்த தமிழ் இலக்கியவிழாவானது திங்கட்கிழமை ஆரம்பமானது.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இரண்டாம் நாள் நிகழ்வு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அப்துல் றசாக்,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் சிறப்பம்சமாக தென்னிந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளரும் இலக்கியவாதியுமான எஸ்.ராமகிருஸ்ணனின் உலக இலக்கியத்தின் பாதை என்னும் தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவும் இடம்பெற்றது.

விசேடமாக இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகைதந்த கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றன.