மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் மூவருக்கு எதிராக மாவட்ட அரசாங்க அதிபர் முறைப்பாடு

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர்,செயலாளர் உட்பட மூன்று ஊடகவியலாளர்கள் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த ஊடகவியலாளர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைசெய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ஊடாக இந்த முறைப்பாட்டை அரசாங்க அதிபர் செய்துள்ளார்.

இணையத்தளம் ஒன்றில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக வெளிவந்த செய்திகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார்,செயலாளர் செ.நிலாந்தன் மற்றும் ஊடகவியலாளர் ஏ.நிதாகரன் ஆகியோருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக மட்டக்களப்பில் இருந்து வெளிவரும் செய்திகள் தொடர்பில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் மாவட்ட அரசாங்க அதிபரினால் பொலிஸ் நிலையம் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்தின் குரல் வளையினை நசுக்கி சர்வாதிகார போக்குடன் ஒரு அரச அதிபர் செயற்படுவதை ஊடக சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது எனவும் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தற்போது அரச அதிபருக்கு எதிராக அரசியல்வாதிகளும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்துள்ள நிலையில் அது தொடர்பான செய்திகளை வெளிப்படுத்தவேண்டிய பொறுப்பு ஊடகவியலாளர்;களுக்கு உள்ளது.அதனைச்செய்யும்போது ஊடகவியலாளர்களை அச்சுறுத்தமுனைவது ஜனநாயகவிரத போக்காகவே கருதவேண்டியுள்ளது.

எனவே இதனை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாக கண்டித்துள்ளதுடன் இதற்கு எதிராக எதிர்காலத்தில் ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஒன்றியம் தெரிவித்துள்ளது.