யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்து மட்டு.சட்டத்தரணிகள் பணி பகிஸ்கரிப்பு

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்தும் சரியான நீதி விசாரணையை வலியுறுத்தியும் மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் இன்று பணிபகிஸ்கரிப்பு மற்றும் கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியில் உள்ள நீதிவான் நீதிமன்றம்,மாவட்ட நீதிமன்றம்,மேல் நீதிமன்றம் ஆகியவற்றில் கடமையாற்றும் சட்டத்தரணிகள் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்திலும் பணி பகிஸ்கரிப்பிலும் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினால் நடாத்தப்பட்ட இந்த போராட்டத்தில் அனைத்து சட்டத்தரணிகளும் கலந்துகொண்ட தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

நீதித்துறை மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம் என்ற கோசத்துடன் நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக ஒன்றுகூடிய சட்டத்தரணிகள் பல்வேறு சொற்பதங்களைக்கொண்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

“நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடாதே,சுட்டதனால் சட்டம் சாகாது,தோட்டாவில் புகையாது தேடிய நீதி,உயிர்நீர்த்து நீதிகாத்த காவலனுக்கு அஞ்சலிகள்”போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

இநேரம் நீதித்துறை எந்த தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக நியாயமாக செயற்படுவதற்கு எதிராக வரும் அனைத்து தலையீடுகளையும் எதிர்கொண்டு அதற்கு எதிராக போராடவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கே.நாராயணன் பிள்ளை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன் இதன் சூத்திரதாரிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன்கொண்டுவரப்படவேண்டும்.
ஒரு நாடு அமைதியான நாடாக இருக்கவேண்டுமானால் அந்த நாட்டில் மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழவேண்டுமானால் அந்த நாட்டின் நீதித்துறை அச்சமின்றியும் சுதந்திரமாகவும் செழிப்புடனும் செயற்படவேண்டும்.

ஒரு நாட்டில் இயற்றப்படும் சட்டத்தினைக்கூட சரியா பிழையா என்று ஆராய்வது கூட நீதிமன்றங்களேயாகும்.அதிகாரிகள் கூட சரியான வழியில் நடக்கின்றார்களா என்று பார்த்து சரிபிழை கூறுவதும் நீதிமன்றங்களாகும்.தனிப்பட்டவர்களிடையே ஏற்படும் பிணக்குகளை தீர்த்து அவர்களுக்கு சரியான தீர்வினை வழங்குவதும் இந்த நீதிமன்றங்களாகும்.
ஒரு மனிதனின் தனி மனித உரிமையை பாதுகாப்பது,அவனது அடிப்படை உரிமையினை பாதுகாப்பதுபோன்ற சகல பொறுப்புகளும் நீதிமன்றத்திற்கே உரியதாகும்.

இவ்வாறான நிலையில் கால்கைகளைக்கட்டி நீதிமன்றங்களுக்கு நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டால் அந்த நீதிமன்றங்கள் சரியான முறையில் கடமையினை செய்யமுடியாத நிலையேற்படும்.அவ்வாறு நடைபெற்றால் அந்த நாடு சீரழிவுநிலைக்கே செல்லும்.

எனவே நீதித்துறை எந்த தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக நியாயமாக செயற்படுவதற்கு எதிராக வரும் அனைத்து தலையீடுகளையும் எதிர்கொண்டு அதற்கு எதிராக போராடவேண்டும்.