கரடியனாறில் விசேட அதிரடிப்படையினருக்கு பயந்து நீரில் பாய்ந்த சகோதரர்களில் தம்பி பலி

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விசேட அதிரடிப்படையினரைக்கண்டு இளைஞர்கள் இருவர் நீரிழ் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தல்குமாரவேலியார் கிராமம் பகுதியில் மண் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை கைதுசெய்ய விசேட அதிரடிப்படையினர் சென்று எச்சரிக்கை வேட்டுகளை தீர்த்தபோது இரு இளைஞர்கள் ஆற்றில் பாய்ந்துள்ளனர்.

குறித்த இரண்டு இளைஞர்களும் சகோதரர்கள் எனவும் இருவரும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொம்மாதுறை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொம்மாதுறையை சேர்ந்த எஸ்.மதுசன்(17வயது)எனவும் படுகாயமடைந்தவர் எஸ்.கிசாந்தன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் விசேட அதிரடிப்படையினர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் பொதுமக்கள் மீதும் விசேட அதிரடிப்படையினர் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

தொடர்ந்தும் அப்பகுதியில் பதற்ற நிலைமை காணப்படுவதன் காரணமாக பொதுமக்கள் மீது கண்ணீர்ப்புகைக்குண்டு தாக்குதலும் நடாத்தப்பட்டுள்ளது.