மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகளிடையே ஒற்றுமையில்லாத காரணமே எடுக்கப்படும் தீர்மானங்கள் பின்தள்ளப்படுகின்றது –வியாழேந்திரன் குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல்வாதிகளிடையே காணப்படும் ஒற்றுமையின்மையே மாவட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் பின்செல்வதற்கு காரணமாகும்.இது ஒரு சாபக்கேடாகவே இருந்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்த நான்காம் திகதியில் இருந்து ஏழாம் திகதி வரையில் பாராளுமன்ற அமர்வுகள் நடைபெற்றது. அந்தவேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் ஒன்றுகூடி பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசினோம். இதுவழமையான ஒரு நடவடிக்கையாகும்.இந்தவேளையில் கடந்த வியாழக்கிழமை அந்த கூட்;டம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து சில இணையத்தளங்களிலும் முகப்புத்தகத்திலும் சம்பந்தனை காட்டிக்கொடுத்த வியாழேந்திரன் எம்.பி.என்று செய்திகள் வெளியிடப்பட்டுவருகின்றன. நான் தேசத் துரோகம் செய்தது போன்று அந்த செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை  இடமாற்றுவது தொடர்பில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைவர் சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அதன்போது பாராளுமன்ற உறுப்பினராகிய நான் அரசாங்க அதிபரை மட்டுமல்ல சில பிரதேச செயலாளர்களையும் இடமாற்றவேண்டும் என்று கூறியதாகவும் அரசாங்க அதிபருக்கு உடனடியாக தகவல் பரிமாறியதாகவும் உடனயாக அவர் ரவூப்ஹக்கீமை தொடர்புகொண்டதாகவும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இது முற்றுமுழுதான பொய்யான செய்தி என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.நான் அந்த கூட்டம் நடந்த பிறகு அரச அதிபரை தொடர்புகொள்ளவேயில்லை.ஆனால் இவ்வாறான நிலையில் எனது பெயருக்கு களங்கத்தினை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்தவரையில் யார் அரசாங்க அதிபராக வந்தாலும் பரவாயில்லை.நாங்கள் தனிப்பட்ட தேவைகளை பூர்த்திசெய்யவேண்டும் என்பதற்காக யாரிடமும் சென்றதுமில்லை.,செல்லப்போவதுமில்லை.மட்டக்களப்பு மாவட்ட மக்களையும் மண்ணையும் நேசிக்கக்கூடிய ,எந்தவித ஊழலும் அற்றவகையில் நேர்மையாக செயற்படக்கூடிய அரசாங்க அதிபரையே நாங்கள் விரும்புகின்றோம்.


சிலர் தற்போதைய அரசாங்க அதிபருக்கு நான் ஆதரவா என்று கேட்கின்றனர்.நான் ஏன் அவருக்கு ஆதரவு வழங்கவேண்டும்.மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஊழல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டபோது இங்கு உடனடியாக ஊழல்வி சாரணைகள்நடாத்தப்படவேண்டும், குற்றம்செய்தவர்கள் யாராக இருந்தாலும் மாவட்டத்தினைவிட்ட அனுப்பப்படவேண்டும்.இது தொட்ர்பில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற காலம் தொடக்கம் கூறிவருகின்றேன்.

அரசாங்க அதிபரின் பிரச்சினையுடன் என்னை தொடர்புபடுத்தி சிலர் இலாபம் ஈட்ட நினைக்கின்றனர்.அரசஅதிபர் ஊழல்செய்திருந்தால் அவர் மாற்றப்படவேண்டும்.புதிய அரசாங்க அதிபர் வருவதற்கு நாங்கள் எந்த எதிர்ப்பினையும் தெரிவிக்கவில்லை.இந்த விடயத்தில் என்னை தொடர்புபடுத்தி இழிவுபடுத்த எடுக்கும் நடவடிக்கைகளை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இது உண்மைக்குப் புறம்பான விடயமாகும். நாங்கள் மாவட்ட செயலகத்தை வைத்திருப்பது அவர்களது சுயநலத்தேவைக்காக அல்ல. மக்களின் சேவைக்காகவே. ஊழல் புரிந்தவர்கள் அரசாங்க அதிபராக இருந்தாலும் சரி எவராயினும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரின் ஊழல் தொடர்பான பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அவை யாவும் வெளிப்படுத்தப்படவேண்டும். இந்த விடயத்தில் நாங்கள் யாருக்கும் துணை போகவில்லை. இந்த அரசாங்க அதிபர் வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்று செல்வதற்கோ அல்லது வேறொருவர் இம்மாவட்டத்திற்கு வருவதற்கோ நாங்கள் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டோம்.
இவ்வாறான நிலையில் ஒருசில ஊடகங்களும் முகப்புத்தகங்களும் இணையத்தளங்களும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவது வேதனைக்குரிய விடயமாகும்.

நான் பாராளுமன்ற உறுப்பினராக இரண்டு வருடங்களாகவே கடமையாற்றி வருகின்றேன். இதற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் காலத்தில் இன்று ஊழல் செய்த அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள் இருக்கவில்லையா? அவர்கள் இவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? ஆனால் இன்று அவர்களோடு சேர்ந்திருக்கின்ற ஒருசிலர் கூட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதற்கு ஆதரவு வழங்குவதாக சொல்கின்றார்கள்.

அவர்கள் பழைய அரசாங்கத்தில் அதிகாரத்தில் இருந்தார்கள். அவர்கள் நினைத்தால் எதுவும் செய்யக்கூடிய நிலையிருந்தது. அப்படியான நிலையிலிருந்தவர்கள் கூட இன்று மாறி என்ன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பார்த்து செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்கின்றார்கள்.

என்னுடைய தனிப்பட்ட தேவைக்காகவோ எனக்கு மரியாதை தரவில்லை என்பதற்காகவோ ஒரு அதிகாரியை பார்த்து மாவட்டத்தை விட்டு செல்லும்படி நான் கூறவில்லை. ஆனால் மக்களுக்கு தீங்கு செய்திருந்தால் அவர் யாராக இருந்தாலும் சரி மாவட்டத்தை விட்டு வெளியேற்றப்பட வேண்டும். ஏனெனில் இது யுத்தத்தால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வறுமைக்குள்ளாக்கப்பட்ட மாவட்டமாகும்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஒட்டுமொத்த தமிழ்மக்களின் பிரச்சனைகளை வெளிக்காட்டிய எழுக தமிழ் பேரணி, கல்குடாவில் கட்டப்பட்டுவருகின்ற எதனோல் உற்பத்தி நிலைய பிரச்சனை, மட்டக்களப்பில் ஆங்காங்கே நடக்கின்ற நில அபகரிப்பு பிரச்சனை, நல்லாட்சியிலும் ஊடகவியலாளர் தாக்கப்பட்டதற்கு எதிராக குரல் கொடுத்தது, துஷ்பிரயோகங்களுக்கு எதிரான போராட்டங்கள் என எல்லாவற்றிலும் நான் மக்களோடு மக்களாக களத்தில் நின்று போராடிய ஒருவனாக இருக்கின்றேன்.

மட்டக்களப்பு இன்று சூறையாடப்பட்டு வருகின்றது. இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன, நீர் நிலைகள் மூடப்படுகின்றன, மயானங்களுக்குரிய காணிகள்கூட திட்டமிட்ட முறையில் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இன்னும் பத்து வருடங்கள் கடந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச காணிகள் என ஒரு பேர்ச் காணி கூட இருக்காது. எமது மக்களுக்கு அபிவிருத்தித் திட்டங்கள் கொண்டுவரப்பட்டால் அதை செய்வதற்கு இடமிருக்காது. இதை எதிர்த்து நாங்கள் பலவழிகளிலும் போராடிக்கொண்டிருக்கின்றோம்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றது முதல் 2017ஆம் ஆண்டு வரை வெருகல் முதல் துறைநீலாவணை வரை இருந்த அரச காணிகளில் எவ்வளவு காணிகள் யார் யாருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்கின்ற விடயம் தகவலறியும் சட்டத்தின் மூலம் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். மயிலம்பாவெளி முதல் களுவங்கேணி வரை இயற்கையாகவே நீர் வழிந்தோடுகின்ற வடிகான்கள் மூடப்பட்டிருக்கின்றன. குளங்கள் முழுமையாக நிரப்பப்பட்டு குடியேற்றங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பல ஏக்கர் அரச காணிகள் அபகரிக்கப்பட்டிருக்கின்றன.

இன்று தமிழ் மக்கள் தங்களுடைய வீட்டிலிருக்கின்ற ஒரு பனை மரத்தை வெட்டவேண்டுமானால் பனை அபிவிருத்திச் சபையிடம் சென்று அனுமதியை பெற வேண்டும். ஆனால்  2009ஆம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. பனை அபிவிருத்திச் சபை ஒரு வழக்கைக்கூட பதிவு செய்யவில்லை.

40வருட யுத்தம் நடைபெற்ற காலத்தில்கூட எமது தமிழ் மக்கள் ஒரு பேர்ச் அரச காணியைக்கூட அபகரிக்கவில்லை. மக்கள் நினைத்திருந்தால் யுத்த காலத்தில் முழு அரசகாணியையும் அபகரித்திருக்க முடியும். அனைத்து அரச காணிகளையும் பாதுகாத்தது எமது மக்களாகும். இவ்விடயத்தில் அவர்களை பாராட்ட வேண்டும்.

வடக்கு கிழக்கில் வரட்சி நிலவி வருகின்றது. கிழக்கில் எத்தனையோ நீரேந்து பிரதேசங்கள் மூடப்பட்டிருக்கின்றன. ஆனால் இது தொடர்பில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன? மயானங்கள் தனியாரால் அபகரிக்கப்பட்டிருக்கின்றன. பிரதேச செயலகங்கள் இதுதொடர்பில் எத்தனை வழக்குகள் பதிவு செய்திருக்கின்றன? மட்டக்களப்பு மாவட்டத்துடன் சம்பந்தப்படாதவர்களுக்கு எத்தனை ஆயிரம் ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பில் நாங்கள் தகவல்களை திரட்டி வருகின்றோம். அவை வெளிக்கொண்டுவரப்படும்.

இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றதே நிலத்திற்காகத்தான். ஆனால் இன்று பாரிய நில சூறையாடல்கள் நடந்துவருகின்றன. இந்த விடயத்தில் மிக முக்கியமாக இடைத்தரகர்களாகவும் உடந்தைகளாகவும் இருப்பவர்கள் ஒரு சில தமிழ் அரச அதிகாரிகளேயாவர். ஒருசில தமிழ் அரச அதிகாரிகள் மாவட்ட மட்டம் தொடக்கம் பிரதேச மட்டம், கிராம மட்டம் வரை காணி கொடுக்கப்பட்ட விடயத்தில் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள். தகவலறியும் சட்டத்தின் மூலம் இது தொடர்பில் தகவல்களை நாங்கள் கோரியிருக்கின்றோம். அவர்களுக்கு எதிராக வழக்குகளை தொடர நாங்கள் தயங்க மாட்டோம்.

இங்கு ஒரு சில அரசியல்வாதிகளின் பின்புலத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.காணிகளை அபகரிக்கும் அவர்கள் அந்த காணிகளை பணம்படைத்தவர்களுக்கு விற்பனைசெய்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.

தளவாயில் பாடசாலை 1938ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து விளையாட்டு மைதானத்துடன் உள்ளது.அதற்கு குறுக்காக இரவோடு இரவாக வேலிஅமைக்கப்பட்டுள்ளது.இன்று அரசகாணிகளுக்கு அரசகாணி என அடையாளம் கூட செய்யப்படவில்லை.2009ஆம் ஆண்டில் இருந்து மேற்கொண்டுவரும் இந்த காணி அபகரிப்புக்கு எதிராக முறையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் இன்று இந்தளவு பாரிய காணி அபகரிப்புகள் இடம்பெற்றிருக்காது.இன்று மட்டக்களப்பில் தமது பகுதிகளில் காடுவெட்டி வீடுகட்டி வாழும் தமிழ் மக்களை எமது அதிகாரிகள் மிரட்டிவருகின்றனர்.அரசகாணிகளை பாதுகாத்த மக்கள் இன்று தமது பகுதிகளில் அதிகாரிகளுக்கு அச்சத்தின் மத்தியில் வாழ்கின்றனர்.சட்டம் முழுவதும் எமது மக்களை நோக்கியோ பாயவைக்கப்படுகின்றது.

ஆனால் ஏனையவர்களுக்கு இந்த சட்டமும் அதிகாரமும் தொழிற்படுவதில்லை.அவ்வாறு பதிவுசெய்வது என்றால் இரண்டு மூன்று பிரதேச செயலகங்களிலேயே 300க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல்செய்யப்பட்டிருக்கவேண்டும்.அவ்வளவு அரசகாணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் யார் ஊழல்செய்திருந்தாலும் அவர்கள் இந்த மாவட்டத்தில் இருந்துவெளியேற்றப்படவேண்டும்.

கல்குடா மதுபான உற்பத்தி நிலையம் அமைக்கப்படுவது தொடர்பில் சர்வதேசம் வரையில் கதைக்கப்பட்டுவந்த நிலையிலும் தொடர்ச்சியாக அது அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றது என்றால் அது அரசியல் பின்புலமே காரணமாக அமைகின்றது.அந்த தொழிற்சாலைக்கு சார்பாக ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்களே கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.

இந்த நல்லாட்சிக்கு அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கிய நிலையில் நிரந்தர அரசியல் தீர்வு விடயத்திற்கு அப்பால் மக்கள் எதிர்பார்த்த எந்த ஒரு எதிர்பார்ப்பும்நிறைவேற்றப்படவில்லை. அதன்காரணமாகவே மக்கள் வீதியில் இறங்கி போராடிவருகின்றனர்.

இந்த அரசாங்கத்திடம் இருந்து ஒரு தீர்வினை எவ்வாறாவது பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றே நாங்கள் ஆதரவு வழங்கிவருகின்றோம். இதனைக்குழப்பி தென்னிலங்கையில் உள்ள இனவாத அமைப்புகளுக்கு வழியேற்படுத்திவிடக்கூடாது.இந்த ஆட்சியிடம் இருந்து எமது மக்களுக்கு தேவையானவற்றை எடுத்தேயாகவேண்டும்.எமது மக்களை இன்னும் பல வருடங்களுக்கு பின்னுக்கு கொண்டுசெல்லமுடியாது.

மக்களின் நலன் தொடர்பான விடயங்களில் மட்டக்களப்பு தமிழ் அரசியல்வாதிகளிடையே ஒருமித்த நிலைப்பாடு இல்லை.அரசியல் தலைமைத்துவங்களுக்குள்ளும் ஒருமித்த கருத்துகள் இல்லை.மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல்வாதிகளிடையே காணப்படும் ஒற்றுமையின்மையே மாவட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் பின்செல்வதற்கு காரணமாகும்.இது ஒரு சாபக்கேடாகவே இருந்துவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தினை அனைத்து வழிகளிலும் வளமான மாவட்டமாக கொண்டுவரவேண்டுமானால் சில விடயங்களுக்கு வேகமான முடிவினை எடுக்கவேண்டுமானால் அனைத்து அரசியல் தலைமைகளையும் ஒன்றாக இணைக்கவேண்டும்.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பலமான சிவில் சமூக அமைப்பு இல்லை.இங்குள்ள சிவில் சமூகம் என்னும் அமைப்பில் உள்ள ஒரு சிலர் இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு பின்னால் திரிபவர்களாகவுள்ளனர்.மட்டக்களப்பில் அரசசார்பற்ற இணையம் ஓரளவு தங்களது பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் தலைமைகளை ஒன்றிணைக்ககூடிய சிவில் சமூக அமைப்பு எதுவும் இல்லாதது கவலைக்குரியதாகும்.சிவில் சமூகத்திற்குள்ளும் ஆயிரம் பிளவுகள்.மாவட்டத்திற்கு தீங்கு விளைவிக்ககூடியது,பிரச்சினையாக விடயங்களுக்கே நாங்கள் உடன்படுவதில்லை.

மட்டக்களப்பு மாவட்;டத்தினை சரியான வழியில் கொண்டுசெல்லவேண்டுமானால் மாவட்டத்தில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் ஒரு தளத்தில் நிற்கவேண்டும்.ஒருமித்த சிந்தனை ஒருமித்த கருத்துடன் பயணிக்கவேண்டும்.

சிறியசிறிய அபிவிருத்தி திட்டங்களுக்காக 35வருடத்திற்கு மேலாக நாங்கள் பட்ட துன்பத்தினையும் வலியையும் அடமானம் வைக்கமுடியாது.தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் தீர்வுத்திட்டத்தின் ஊடாக எமது மக்களுக்கு பெறக்கூடியதை பெற்றேயாகவேண்டும்.

எமது மக்கள் கடந்த 30வருடங்களிலயுத்தத்தினால் உயிரிழப்புகளை சந்தித்து அழிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு இன்று அநாதைகளாக பல வேதனைகளையும் சோதனைகளையும் எதிர்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மாதக்கணக்கில் வீதிகளில் இருந்துகொண்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

எமது மக்கள் இந்த நல்லாட்சியை கொண்டுவருவதற்காக முழுமையாக தங்களை தியாகம் செய்திருக்கின்றார்கள். மக்கள் இந்த நல்லாட்சியில் நல்லதொரு தீர்வை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் தென்னிலங்கையில் பௌத்த மதத்தைச் சேர்ந்த அஸ்கிரிய போன்ற உயர் பீடங்கள் அரசியலமைப்பு தொடர்பான விடயங்களில் வடகிழக்கு இணைப்பு இல்லை, அதிகாரங்கள் கொடுக்கப்படத் தேவையில்லை என்கின்ற விடயங்களை சொல்கின்றனர். ஒரு சில பௌத்த பீடங்களை சேர்ந்த மகாநாயக்கர்களின் கருத்துகள் இவ்வாறிருக்கின்றன.

பாதிக்கப்பட்டு வலிகளையும் வேதனைகளையும் சுமந்து நிற்கின்ற எமது மக்களுக்கு இந்தக் கருத்துக்கள் பாரிய வெடிகுண்டுகளை தலையில் போட்டதற்கு சமனாகவே கருதுகின்றேன்.

இந்த நாட்டில் இனவாத்தையும் மத வாதத்தையும் விரும்பாத சிங்கள மக்கள்,தமிழ் மக்கள்,முஸ்லிம் மக்கள் இணைந்துதான் இந்த ஆட்சியை ஏற்படுத்தினார்கள் என்பதை மகாநாயக்கர்கள் புரிந்துகொள்ள வேண்டும். முன்னைய காலத்தைவிட இந்த ஆட்சியில் சுதந்திரம் இருக்கின்றது. இந்த ஆட்சியை அவர்கள்; வரவேற்கின்றனர். இந்த ஆட்சியை அவர்கள் வரலவேற்பதற்கு இந்த நாட்டின் சிறுபான்மை மக்களே காரணமாவார்கள்.

ஆகவே இந்த விடயத்தில் அஸ்கிரிய போன்ற உயர் பீடங்கள் எங்களுடைய பிரச்சனைகளையும் வலிகளையும் உணர்ந்து கொள்ள வேண்டும். நாங்கள் இந்த நாட்டிற்குரியவர்கள். எங்களுக்குரிய நீதியான நியாயமான விடயங்களை கேட்டு நிற்கின்றோம்.

எங்களுடைய தமிழ் தலைமைகள் இதுவரை காலமும் சரியாக செயற்பட்டிருக்கின்றோமா என்ற கேள்வியை எங்களுக்குள் கேட்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். எங்களுடைய பிரச்சனைகளை நாங்கள் சிங்கள சிவில் சமூகங்களோடு பேசிய வீதம் குறைவாகவே உள்ளது. சிங்கள சிவில் சமூகங்கள் மத்தியில் எங்களுடைய பிரச்சனைகள் சரியான முறையில் கொண்டு செல்லப் படவில்லை. அதனால் அவர்கள் எங்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை.

அதுமட்டுமல்லாமல் பௌத்த உயர்பீட மகாநாயக்கர்கள் மத்தியில்கூட எங்களுடைய பிரச்சனைகள் முழுமையாக கொண்டுசெல்லப்படாத சூழல் நீண்டகாலமாக இருந்து வருகின்றது.

தற்போதைய நிலையில் எமது பிரச்சனைகள் சிங்கள மக்கள் மத்தியிலும் மகாநாயக்கர்கள் மத்தியிலும் ஓரளவு பேசப்பட்டிருக்கின்றது. இருந்தபோதும் அது இன்னும் கொண்டுசெல்லப்படவேண்டும். அவர்கள் எங்களை இன்னும் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணமாகும்.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தமோ அழிவோ ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. மகாநாயக்கர்கள் எமது விடயத்தில் கனிவுடனும் மனித நேயத்தோடும் நடந்துகொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.