மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் -நீர்தாரை வாகனத்துடன் பொலிஸார் பலத்த பாதுகாப்பு

மட்டக்களப்பு மாவட்ட செயலாளரை இடமாற்றக்கோரியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இரண்டு பிரதேச செயலாளர்களின் இடமாற்றங்களை இரத்துச்செய்யக்கோரியும் மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை முற்பகல் முன்னெடுக்கப்பட்டது.

ஊழலுக்கு எதிராண மக்கள் பேரணியும் நியாயமான அதிகாரிகளின் இடமாற்றத்தினை ரத்துச்செய்வதற்குமான வேண்டுகோள் என்னும் தலைப்பில் இந்த கவன ஈர்ப்பு போராட்டமமும் பேரணியும் நடைபெற்றது.

மட்டக்களப்பில் ஊழல்களில் ஈடுபடுவோரை மாவட்டத்தில் இருந்துவெளியேற்ற வேண்டும் என்பதுடன் அவர்களுக்கான தகுந்த தண்டனைகளும் வழங்கப்படவேண்டும்.அதற்காக அனைவரும் இணைந்து போராட முன்வரவேண்டும் என பொது அமைப்புகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இந்த கவன ஈர்ப்பு போராட்டமமும் பேரணியும் நடாத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில் வாகரை மற்றும் செங்கலடி பிரதேச மக்களும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,எஸ்.வியாழேந்திரன்,ஞா.சிறிநேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்பான முறையில் சேவையாற்றிவரும் இரண்டு பிரதேச செயலாளர்களை இடமாற்றம் செய்ய மேற்கொண்டுவரும் நடவடிக்கைகக்கு இதன்போது கடுமையான எதிர்ப்பு தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்பில் வெளிவரும் ஊழல்கள் தொடர்பில் உரியர்கள் கவனத்தில் கொண்டு அவர் வெளியேற்றப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பாரிய ஊழல் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும்போது அது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.ஆனால் ஊழலுடன் சம்பந்தப்பட்டவரை வைத்துக்கொண்டு ஊழல் தொடர்பில் விசாரணைசெய்யமுடியாது எனவே மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்து ஊழல் விசாரணைகள் நடாத்தப்படவேண்டும் எனவும் இங்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பிரதேச செயலாளர்கள் ஊழல் செய்கின்றார்கள் மோசடி செய்கின்றார்கள் என்று ஒரு மாவட்ட அரசாங்க அதிபர் கூறுகின்றார் என்றால் அது தொடர்பில் அவரையே விசாரணை செய்யவேண்டும் எனவும் மக்கள் தெரிவித்தனர்.

இதன்போது மட்டு.அரசஅதிபரின் சாதனை மதுபோதையில் முதலிடம்,வறுமையில் முதலிடம்,ஊழல்செய்யும் அதிகாரிகளின் அதிகாரத்தினை கட்டுப்படுத்துவது யார்,நல்லாட்சி அரசாங்கம் ஊழலுக்கு சார்பானதா,மட்டக்களப்பு மக்கள் அரசியல் அநாதைகளா?,மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வரும் வெளிநாட்டு பணம் எங்கே? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இதன்போது ஜனாதிபதிக்கு வழங்குவதற்கான மகஜர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

காந்தி பூங்கா முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுடன் ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பிரதான வாயில் பூட்டுகள் போட்டு பூட்டப்பட்டதுடன் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் கலகமடக்கும் பொலிஸார் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடாத்தும் வாகனமும் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்தன.